அதிக உதிரி ரன்கள்-இந்தியா புதிய சாதனை!

பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில், இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது.
இதில், இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் அபாரமாக ஆடி 626 ரன்களைக் குவித்தது. கங்குலி இரட்டை சதம் அடித்தார். யுவராஜ் சிங், இர்பான் பதான் ஆகியோரும் சதம் அடித்தனர்.
இதையடுத்து பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. விரைவாக பாகிஸ்தானை அவுட்டாக்கி, 'பாலோ ஆன்' வாங்க வைத்து விடுவார்கள் இந்திய பந்து வீச்சாளர்கள் என ரசிகர்கள் நினைத்தனர்.
ஆனால் மீண்டும் ஒரு சொதப்பலான பந்து வீச்சை இந்திய வீரர்கள் வெளிக்காட்டியதால் பாகிஸ்தான் அணி ரன்களைக் குவிக்க ஆரம்பித்தது.
இதில் வேடிக்கை என்னவென்றால் பாகிஸ்தான் வீரர்களுக்கு 'ஆதரவாக' இந்திய பந்து வீச்சாளர்கள் உதிரி ரன்களை அள்ளி வழங்கியுள்ளனர். இதில் ஏற்கனவே இருந்த உலக 'சாதனை'யையும் இந்திய பந்து வீச்சாளர்கள் முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளனர்.
இன்று பிற்பகல் இடைவேளையின்போது இந்தியா வழங்கிய உதிரி ரன்களின் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்தது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில், ஒரு அணி வழங்கிய அதிகபட்ச உதிரி ரன்கள் இதுதான்.
இதன் மூலம் முந்தைய சாதனையான 71 ரன்கள் என்ற அளவை இந்திய வீரர்கள் முறியடித்துள்ளனர். கடந்த 1988ம் ஆண்டு இதே பாகிஸ்தான் அணிக்கு எதிராக மேற்கு இந்தியத் தீவுகள் அணி, தனது சொந்த மணணில் 71 உதிரி ரன்களைக் கொடுத்து சாதனை படைத்திருந்தது.
மேலும், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் திணேஷ் கார்த்திக்கும் புதிய 'சாதனை' படைத்தார். துணை கேப்டன் டோணிக்குப் பதிலாக கீப்பிங் செய்து வரும் திணேஷ் கார்த்திக், 31 'பைஸ்'களை விட்டுக் கொடுத்து, அதிக அளவிலான பைஸ்களை விட்டுக் கொடுத்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையைப் பெற்றார்.
இதற்கு முன்பு புதி குந்தீரன், 1964ம் ஆண்டு கான்பூரில் நடந்த டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்துக்கு எதிராக 29 பைஸ்களை விட்டுக் கொடுத்ததே சாதனையாக இருந்தது. அந்த சாதனையும் பெங்களூர் டெஸ்ட்டில் 'காலி' செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் அதிக அளவிலான பைஸ்களை விட்டுக் கொடுத்த உலக சாதனையாளராக இங்கிலாந்து கீப்பர் லெக் ஆம்ஸ் உள்ளார். அவர் 37 பைஸ்களை விட்டுக் கொடுத்துள்ளார். எனவே கார்த்திக் கவலைப்படத் தேவையில்லை.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான பந்து வீச்சில் இந்தியா, மொத்தம் 31 பைஸ்கள், 15 நோ பால்கள், 26 லெக் பைஸ்களை விட்டுக் கொடுத்துள்ளது.
உணவு இடைவேளையின்போது 6 விக்கெட் இழப்புக்கு 440 ரன்களை எடுத்திருந்தது பாகிஸ்தான்.
ஜெயிச்சுருவோமா?
Story first published: Wednesday, December 7, 2011, 17:32 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications