
முதல் இன்னிங்க்ஸ்
அலஸ்டர் குக் கடைசி போட்டி, இந்தியாவுக்கு ஆறுதல் வெற்றி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்புகளோடு துவங்கியது இந்த ஐந்தாம் டெஸ்ட் போட்டி. முதலில் பேட் செய்த இங்கிலாந்தின், குக் அரைசதம் அடித்து தன் கடைசி போட்டியில் முத்திரை பதித்தார். குக் 71, பட்லர் 86 அடிக்க இங்கிலாந்து 332 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து ஆடிய இந்தியாவில், கோலி 49, விஹாரி 56, ஜடேஜா 86 ரன்கள் அடிக்க, இந்தியா 292 ரன்கள் அடித்தது.

இங்கிலாந்து இரண்டாம் இன்னிங்க்ஸ்
40 ரன்கள் முன்னிலையில் துவங்கிய இங்கிலாந்து துவக்கத்தில் இரண்டு விக்கெட்களை இழந்தது. அடுத்து கூட்டணி அமைத்த ஜோ ரூட், குக், இந்திய பந்துவீச்சை சோதித்தனர். பொறுமையாக ஆடிய இந்த இணை 259 ரன்கள் குவித்தது. குக் 147, ரூட் 125 ரன்கள் அடிக்க இங்கிலாந்து 423 ரன்களுக்கு 8 விக்கெட்கள் இருந்த நிலையில் டிக்ளேர் செய்தது.

இந்தியா மோசம்
464 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்த வந்த இந்தியா, துவக்கத்தில் 3 விக்கெட்களை இழந்தது. தவான் 1, புஜாரா 0, கோலி 0 என வெளியேற இந்தியா 2 ரன்களுக்கு 3 விக்கெட்கள் இழந்து இருந்தது. ரஹானே, ராகுல் கூட்டணி அமைத்து 118 ரன்கள் எடுத்தனர். ரஹானே 37 ரன்களில் வெளியேறினார். அடுத்து விஹாரி 0 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்த சில ஓவர்களில் ஆட்டம் முடிந்து விடும் என பலரும் நினைத்தனர்.

சூப்பர் கூட்டணி
121-5 என்ற நிலையில், கூட்டணி அமைத்த ராகுல், பண்ட் 204 ரன்கள் குவித்தனர். இருவரும் சதம் அடித்து இந்திய அணிக்கு நம்பிக்கை அளித்தனர். ஒரு கட்டத்தில் இவர்கள் இந்தியாவிற்கு வெற்றியை பெற்றுத் தருவார்கள் என்ற எண்ணம் கூட வந்தது. எனினும், 325 ரன்கள் இருக்கும் போது ராகுல் வெளியேற, அடுத்து அனைவரும் வரிசையாக ஆட்டமிழக்க இந்தியா 345 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்தியா 1-4 என டெஸ்ட் தொடரில் படு மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. இந்த தோல்வியில் ஒரே ஆறுதலாக ரிஷப் பண்ட், ராகுல் சதம் மற்றும் ஜடேஜா, விஹாரி அரைசதம் அமைந்தது.


Click it and Unblock the Notifications
