யார் டாப்.. இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு முதல் டெஸ்ட்.. இன்று துவங்குகிறது!
பிர்மிங்காம்: இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி எட்பாஸ்டனில் இன்று மாலை 3.30 மணிக்கு துவங்குகிறது. உலகின் நம்பர் 1 அணி என்பதை நிரூபிக்க இந்தியாவும், டெஸ்டில் நாங்கதான் கிங் என்பதை 1000மாவது போட்டியில் விளையாடும் இங்கிலாந்தும் நிரூபிக்க முயற்சிக்கும்.
இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி-20 போட்டித் தொடரை இந்தியா 2-1 என வென்றது. அடுத்து நடந்த ஒருதினப் போட்டித் தொடரை இங்கிலாந்து 2-1 என வென்றது.
ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடர் இன்று துவங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டி பிர்மிங்காமில் உள்ள எட்பாஸ்டன் மைதானத்தில் நடக்க உள்ளது.
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தொடராக இந்த டெஸ்ட் தொடர் பார்க்கப்படுகிறது. இதுவரை இங்கிலாந்தில் நடந்துள்ள 19 தொடர்களில் 3ல் மட்டுமே இந்தியா வென்றுள்ளது. கடைசியாக ராகுல் டிராவிட் தலைமையில் 2007ல் இந்தியா தொடரை வென்றது.

1000மாவது டெஸ்ட்
இந்த டெஸ்ட், இங்கிலாந்து அணியின் ஆயிரமாவது டெஸ்ட் போட்டியாகும். இதுவரை 999 டெஸ்ட்களில் விளையாடியுள்ள இங்கிலாந்து 357ல் வென்றுள்ளது. 297ல் தோல்வி கண்டது. 345 டெஸ்ட்கள் டிராவில் முடிந்தன.

கணக்குகள் சாதகம்
இந்தியா இதுவரை இங்கிலாந்து மண்ணில் 57 டெஸ்ட்களில் விளையாடியுள்ளது. அதில் 30ல் இங்கிலாந்து வென்றுள்ளது. 21 டிராவில் முடிந்தது. இந்தியா 6 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது.

சாதிப்பாரா கோஹ்லி
ரன் மெஷின் விராட் கோஹ்லிக்கு தனிப்பட்ட முறையிலும் கேப்டன் என்ற முறையிலும் மிகவும் முக்கியமான தொடராக இது அமைந்துள்ளது. 2014ல் நடந்த தொடரில் 13.40 என்ற மோசமான சராசரியுடன் 10 இன்னிங்சில் 134 ரன்கள் மட்டுமே எடுத்தார். தற்போது நல்ல ஃபார்மில் உள்ள கோஹ்லி, தனது பேட்டிங் திறமையை காட்டுவதற்கு வாய்ப்பாக இந்தத் தொடர் அமைந்துள்ளது.

மீண்டு வருமா இங்கிலாந்து
இங்கிலாந்து அணி கடைசியாக விளையாடிய 9 டெஸ்ட்களில் ஒன்றில் மட்டுமே வென்றுள்ளது. சொந்த மண்ணில் கடைசியாக விளையாடிய 5 ஆட்டங்களில் 2ல் தோல்வியைந்துள்ளது. இரு அணிகளும் வலுவான பேட்டிங் வரிசை கொண்டிருந்தாலும், பந்து வீச்சாளர்கள் எப்படி செயல்பட போகிறார்கள் என்பதே வெற்றியை நிர்ணயிக்கும். ஆயிரமாவது போட்டியில் இங்கிலாந்து வெல்லுமா, இங்கிலாந்தில் தொடரை வெல்வதற்கு அச்சாரமாக முதல் டெஸ்டில் இந்தியா வெல்லுமா என்ற எதிர்பார்ப்புடன் இன்று டெஸ்ட் போட்டி துவங்க உள்ளது.


Click it and Unblock the Notifications