IND vs ENG: இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்.. இந்திய ரசிகர்களுக்காக நேரம் மாற்றம்.. முழு விவரம்
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரின் மூன்று போட்டிகளுக்கான தொடக்க நேரத்தை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (ECB) மாற்றியுள்ளது. இந்தியத் தொலைக்காட்சி ரசிகர்களின் நலனை முன்னிட்டு, பிசிசிஐ (BCCI) மற்றும் ஒளிபரப்பு நிறுவனங்களுடன் கலந்தாலோசித்த பிறகு இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஜூலை 1 முதல் 19 வரை நடைபெறவுள்ள இந்தச் சுற்றுப்பயணத்தில் ஐந்து டி20 போட்டிகளும், மூன்று ஒருநாள் போட்டிகளும் அடங்கும்.
முன்பு இரவு 11:00 மணி (இந்திய நேரம்) எனத் திட்டமிடப்பட்டிருந்த மூன்று டி20 போட்டிகள், இனி ஒரு மணி நேரம் முன்னதாக இரவு 10:00 மணிக்குத் தொடங்கும். தற்போது இங்கிலாந்தில் உள்ளூர் நேரப்படி மாலை 5:30 மணிக்கு இவை தொடங்கும். இந்த மாற்றத்தினால், நள்ளிரவு 3:00 மணி வரை நீடிக்கக்கூடிய போட்டி நேரமானது, 2:00 மணிக்குள் நிறைவடைய வாய்ப்புள்ளதால் இந்திய ரசிகர்களுக்குப் பெரும் வசதியாக இருக்கும்.

அதேநேரம், ஜூலை 4 அன்று ஓல்ட் டிராஃபோர்டிலும், ஜூலை 11 அன்று ஏஜியஸ் பவுலிலும் நடைபெறவுள்ள மீதமுள்ள இரண்டு டி20 போட்டிகள், திட்டமிட்டபடி இந்திய நேரப்படி இரவு 7:00 மணிக்கு உள்ளூர் நேரம் மதியம் 2:30) தொடங்கும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், பிசிசிஐ, மற்றும் ஸ்கை ஸ்போர்ட்ஸ், சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் உள்ளிட்ட தொடர்புடைய தரப்பினருடன் ஆலோசித்த பிறகே இந்த அட்டவணை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு அதிக வணிக மதிப்பைக் கொண்டு வருவதை இந்த மாற்றம் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. தொலைக்காட்சி ரசிகர்களின் எண்ணிக்கையே இத்தகைய அட்டவணை முடிவுகளுக்கு முக்கியக் காரணமாக உள்ளது. இந்தத் தொடருக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக உள்ளது; பெரும்பாலான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்றுத் தீர்ந்துவிட்டன.
இந்த சீசனில் 15 வயதான இளம் வீரர் வைபவ் சூர்யவன்சியின் வருகை, இந்திய ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல் போட்டியில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே அவர் ரசிகர்களைப் பெருமளவில் ஈர்த்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் ஏ மற்றும் இலங்கை ஏ அணிகளுக்கு எதிரான இந்தியா ஏ அணியின் முத்தரப்புத் தொடரை சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் ஒளிபரப்ப முடிவு செய்தது, இங்கிலாந்து வாரியத்திற்கு கூடுதல் நம்பிக்கையை அளித்துள்ளது.இங்கிலாந்தில் ஜூலை மாதத்தில் இரவு 9:00 மணி வரை சூரிய வெளிச்சம் நீடிக்கும் என்பதால், பெரும்பாலான ஆட்டங்கள் பகல் நேரத்திலேயே நடைபெறும் சூழல் நிலவுகிறது.


Click it and Unblock the Notifications

