லண்டன்: இந்தியா மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது, இங்கிலாந்து வீராங்கனை டாமி பியூமண்ட் பந்தை காலால் உதைக்க முயன்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு இந்திய அணி ஃபீல்டிங்கை தடுக்க முயன்றார் என அவுட் கேட்டது. ஆனாலும் அவுட் கொடுக்கப்படவில்லை. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என சமன் செய்தது.
போட்டியின் ஐந்தாவது ஓவரில், இந்திய சுழற்பந்து வீச்சாளர் தீப்தி ஷர்மா வீசிய பந்தை, இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் டாமி பியூமண்ட் மிட்-விக்கெட் திசையில் தட்டிவிட்டார். அங்கே பீல்டிங் செய்து கொண்டிருந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ், வேகமாக பந்தை எடுத்து கீப்பர் ரிச்சா கோஷை நோக்கி எறிந்தார். ஆனால், பந்து கீப்பரை சென்றடைவதற்குள், பியூமண்ட் அதனை தனது காலால் உதைக்க முயற்சிப்பது போலத் தெரிந்தது.
பியூமண்டின் இந்த முயற்சி தவறினாலும், களத்தில் இருந்த இந்திய வீராங்கனைகளுக்கு இது அதிருப்தியை ஏற்படுத்தியது. உடனடியாக, ரிச்சா கோஷும், ஜெமிமாவும் நடுவர்களிடம் முறையிட்டனர். இதன் காரணமாக ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டு, மூன்றாவது நடுவரின் உதவி கோரப்பட்டது.

பலமுறை ரீப்ளேக்களை ஆய்வு செய்த மூன்றாவது நடுவர், பியூமண்ட் அவுட் இல்லை என தீர்ப்பளித்தார். பியூமண்ட் கிரீஸிற்குள் இருந்ததாலும், அவரது செயல் தற்செயலானதோ, தற்காப்புக்கானதோ இல்லை என்றாலும், அவர் வேண்டுமென்றே ஃபீல்டிங்கை தடுக்க முயன்றாரா? என்பது விவாதத்திற்குள்ளானது.
புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டி, மழையால் 29 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 29 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 42 ரன்களும், தீப்தி ஷர்மா 30 ரன்களும் எடுத்தனர்.
பின்னர், மீண்டும் மழை குறுக்கிட்டதால், டக்வொர்த்-லூயிஸ்-ஸ்டெர்ன் (DLS) முறைப்படி, இங்கிலாந்து அணிக்கு 24 ஓவர்களில் 115 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி, 21 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 116 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இங்கிலாந்து அணியின் சார்பில் ஆமி ஜோன்ஸ் ஆட்டமிழக்காமல் 46 ரன்கள் எடுத்தார். சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்திய சோஃபி எக்லஸ்டோன் ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம், இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது. தொடரை வெல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி, ரிவர்சைடு மைதானத்தில் நடைபெற உள்ளது.