மாஸ் ரெக்கார்டு.. தன் உலக டி20 சாதனையை தானே சமன் செய்த இந்திய அணி.. தென்னாப்பிரிக்கா எங்கேயோ இருக்கு
ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 219 ரன்கள் குவித்ததன் மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் ஒரு காலண்டர் ஆண்டில் அதிக முறை 200க்கும் அதிகமான ரன்களைக் குவித்த அணி என்ற தனது முந்தைய உலக சாதனையை இந்திய அணி சமன் செய்துள்ளது.
ஹராரேவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 219 ரன்கள் எடுத்ததன் மூலம், 2026 ஆம் ஆண்டில் மட்டும் 9வது முறையாக இந்திய அணி 200 ரன்களுக்கு மேல் எடுத்து சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் 2024 ஆம் ஆண்டிலும் இந்திய அணி 9 முறை 200க்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்திருந்தது. இதன்மூலம் தன் சொந்த உலக சாதனையை இந்திய அணி மீண்டும் எட்டியுள்ளது.

மேலும், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி ஒட்டுமொத்தமாக 52 முறை 200க்கும் அதிகமான ரன்களைக் குவித்து முதலிடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் தென்னாப்பிரிக்காவே இந்தியாவை விட மிகவும் பின்தங்கி உள்ளது. தென்னாப்பிரிக்கா 29 முறை மட்டுமே 200க்கும் அதிகமான ரன்களை எடுத்துள்ளது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு மோசமான தொடக்கம் கிடைத்தது. அபிஷேக் சர்மா 8 ரன்களிலும், வைபவ் சூரியவன்ஷி 9 பந்துகளில் 20 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். அடுத்து வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் இஷான் கிஷன் மற்றும் திலக் வர்மா ஜோடி ஜிம்பாப்வே பந்துவீச்சை துவம்சம் செய்தது.
அதிரடியாக ஆடிய இஷான் கிஷன் 31 பந்துகளில் அரைசதம் அடித்து, மொத்தமாக 44 பந்துகளில் 81 ரன்கள் விளாசினார். மறுமுனையில் ரன் மழை பொழிந்த திலக் வர்மா வெறும் 23 பந்துகளில் அரைசதம் கடந்து, 29 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
சிக்கந்தர் ராசா வீசிய 15வது ஓவரில் இந்த ஜோடி 21 ரன்களை விளாசியது. இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் குவித்தது. 220 ரன்கள் இலக்கை துரத்திய ஜிம்பாப்வே 129 ரன்களுக்கு சுருண்டதால் இந்தியா 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.


Click it and Unblock the Notifications

