வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்-இந்தியா வெற்றிமுகம்

இந்தியா, வங்கதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சிட்டகாங்கில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 243 ரன்களும், வங்கதேச அணி 242 ரன்களும் எடுத்தன.
நேற்று ஒரு ரன் முன்னிலையுடன் இந்தியா 2வது இன்னிங்சை தொடங்கியது. கம்பீரும், தற்காலிக கேப்டன் ஷேவாக்கும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினார்கள்.
முதல் விக்கெட்டுக்கு 90 ரன்கள் விளாசிய நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. ஷேவாக் 45 ரன்களுடன் (58 பந்துகள்) ஷகிப் அல் ஹசன் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார்.
நேற்று இந்திய அணி 2வது இன்னிங்சில் 22.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 122 ரன்கள் எடுத்திருந்த போது, போதிய வெளிச்சமின்மையால் முன்கூட்டியே ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. கம்பீர் 47 ரன்களுடனும், அமித் மிஸ்ரா 24 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில் இன்று காலை ஆட்டம் தொடங்கியது. 38வது ஓவர் வரை அடித்து ஆடிய அமித்மிஸ்ரா 50 ரன்களுடன் மகமுத்துல்லா பந்தில் தமிம் இக்பாலிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
கவுதம் கம்பீர் சதத்தை கடந்து விளையாடிக் கொண்டிருந்தார். பின்னர் 47.4வது ஓவரில் நஃபீஸ் பந்தில் அவுட்டானார். 129 பந்துகளில் 10 பவுண்டரி ஒரு சிக்சர் உட்பட 116 ரன்கள் எடுத்திருந்தார் கம்பீர்.
இதன்பின் ராகுல் டிராவிட் 24 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். சச்சின் டெண்டுல்கரும் இதேபோல 16 ரன்கள் மட்டுமே எடுத்து எல்பிடபுள்யூ ஆனார்.
இதன் பின் வந்த யுவராஜ் சிங்கும் 32 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து கேட்ச் கொடுத்து ஆவுட்டானார். தினேஷ் கார்த்திக் 42 பந்துகளை சந்தித்து 27 ரன்களோடு பெவிலியனுக்கு திரும்பினார்.
ஜாகீர்கான் 17 பந்துகளில் 3 பவுண்டரிகள் உட்பட 20 ரன்கள் சேர்த்து ஷாகிப் அல் ஹசன் பந்தில் போல்ட் ஆனார். இவரையடுத்து இஷாந்த் சர்மாவும் லக்ஷ்மனும் ஜோடி சேர்ந்தனர்.
87வது ஓவரில் இந்தியா 8 விக்கெட் இழப்புக்கு 413 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் டிக்ளேர் செய்யப்பட்டது.
லக்ஷ்மன் 89 பந்துகளில் 5 பவுண்டரிகள் உட்பட 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இஷாந்த் சர்மா 14 பந்துகளில் 7 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து 415 ரன் இலக்கை நோக்கி வங்கதேச அணி களமிறங்கியது. இம்ருல் காயஸ் 6 பந்துகளை சந்தித்து ஒரே ஒரு ரன் மட்டுமே எடுத்து 2வது ஓவரிலேயே ஜாகிர்கானிடம் ஆவுட்டானார்.
ஷாரியர் நஃபீஸ் 27 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து ஷேவாக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இந்த விக்கெட்டை இஷாந்த் வீழ்த்தினார்.
துவக்க ஆட்டக்காரரான தமீம் இக்பால் 23 ரன்களுடனும், முகமது அஷ்ரஃபுல் 16 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
வங்கதேச அணி 18 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 67 ரன் எடுத்து 4வது நாள் ஆட்டத்தை முடித்துக்கொண்டது.
கம்பீர் சாதனை:
சதமடித்த கம்பீர் ஒரு புதிய சாதனையை நிகழ்த்தினார். ஐந்து டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து ஐந்து சதங்கள் கண்ட நான்காவது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் கம்பீர்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் நேப்பியரில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 137 ரன்களையும், ஏப்ரலில் வெல்லிங்டனில் நடந்த போட்டியில் 167 ரன்களையும், நவம்பர் மாதம் அகமதாபாத்தில் நடந்த இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில்,114 ரன்கலையும், கான்பூரில் நடந்த போட்டியில் 167 ரன்களையும் எடுத்திருந்தார் கம்பீர். தற்போது ஐந்தாவது டெஸ்ட் போட்டியிலும் சதம் கண்டுள்ளார்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:34 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications