ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியின் பலம் மற்றும் பலவீனம்
பெங்களூரு : ஆறு நாடுகள் பங்குபெறும் ஆசிய கோப்பை போட்டிகள் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்க இருக்கிறது.
இப்போட்டிக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஆசிய கோப்பை போட்டிகளுக்கு ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்திய அணியின் பலம் மற்றும் பலவீனம் குறித்த ஒரு அலசல் இதோ.
புதிய கேப்டன் :
தொடக்க வீரர் ரோஹித் சர்மா இது வரை 3 ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக பணியாற்றி அதில் இரண்டு வெற்றிகளையும் ஒரு தோல்வியையும் பெற்றுள்ளார். நடப்பு ஆசிய கோப்பை சாம்பியனாக உள்ள இந்தியா ரோஹித் தலைமையில் கோப்பை வெல்லும் வாய்ப்புகள் அதிகம்.
பேட்டிங் :
இந்திய அணியின் தொடக்க வீரர்கள் தவான்,ரோஹித் மற்றும் ராகுல் ஆகியோர் நல்ல பார்மில் இருப்பது அணிக்கு பலமாகும்.
விராட் கோஹ்லியின் நான்காமிடத்திற்கு மனிஷ் பாண்டே அல்லது அம்பத்தி ராயுடு களமிறங்க வாய்ப்புகள் அதிகம். பாண்டே சமீபத்தில் நடந்த ஏ அணிக்கெதிரான போட்டிகளில் 300+ ரன்களை குவித்தது குறிப்பிடத்தக்கது. ராயுடுவும் சிறப்பான பார்மில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மனிஷ் பாண்டே கடைசியாக இந்திய அணிக்காக கடந்த வருடம் டிசம்பரில் விளையாடினார். அம்பத்தி ராயுடு கடைசியாக 2016ஆம் ஆண்டு ஒருநாள் போட்டியில் பங்கேற்றார்.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் சரிவர பேட்டிங் செய்யாத தோனி இந்த தொடரில் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். ஆல்-ரவுண்டர் பாண்டியா தற்போதைய இங்கிலாந்து தொடரில் கலக்கி வருவதும் பேட்டிங் வரிசையில் நமக்கு கூடுதல் பலமாகும். கேதார் ஜாதவ் அதிரடி பேட்டிங் அணிக்கு கை கொடுக்கும்.
ஆனால் விராட் கோஹ்லி இல்லாத நிலையில் அனுபவ வீரர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டியது மிகவும் அவசியம். இல்லையென்றால் வெற்றி பெறுவது சற்றே கடினம்.
பந்துவீச்சு :
பந்துவீச்சை பொறுத்தவரை இந்திய அணி மிகவும் பலமாக உள்ளது. காயத்தில் இருந்து மீண்ட புவனேஸ்வர் குமார் மற்றும் பும்ரா ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் தவிர்த்து ஷர்துல் தாக்குர் மற்றும் அறிமுக வீரர் கலீல் அஹ்மத் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
முக்கியமான சமயங்களில் பும்ரா நோ பால்களை வீசுவது சில நேரங்களில் மிகப்பெரிய பின்னடைவை அளிப்பது தற்போதைய பெரும் பலவீனம்.
சுழல் பந்துவீச்சை பொறுத்தவரை சஹால், குல்தீப் யாதவ் மற்றும் அக்ஸார் படேல் ஆகியோர் தேந்தெடுக்கப்பட்டுள்ளனர்.கேதார் ஜாதவ் பகுதி நேர சுழல் பந்துவீச்சாளராக செயல்படுவார். எனினும் இந்திய அணி இரண்டு வேகபந்துவீச்சாளர்கள் மற்றும் இரண்டு சுழல் பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கும் வாய்ப்புகள் அதிகம்.
இந்திய அணி ஆசிய கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் அணியை செப்டம்பர் 19ஆம் தேதி எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.
Story first published: Saturday, September 1, 2018, 16:34 [IST]
Other articles published on Sep 1, 2018


Click it and Unblock the Notifications