
அசத்திய ராகுல்
இரண்டாம் நாளின் பாதி ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. இந்திய அணி 46.4வது ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்திருந்தது. லோகேஷ் ராகுல் 57 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். மூன்றாம் நாள் ஆட்டத்தின் தொடக்கத்தில் ரிஷப் சிக்ஸ், பவுண்டரி என தனது கியரை மாற்றிய நேரம், 25 ரன்களில் ராபின்சன் பந்தில் கேட்ச் ஆனார். அவர் 20 பந்துகளை சந்தித்து 3 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸ் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட லோகேஷ் ராகுல், இரண்டு கேட்ச் வாய்ப்புகளில் இருந்து தப்பித்து 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுபக்கம் ஜடேஜா அற்புதமாக விளையாடினார். அவர் 86 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ராபின்சன் பந்தில் ஆட்டமிழந்தார். ஜடேஜாவின் இந்த அரைசதம் வந்திருக்கவில்லை எனில், இந்திய அணியும் இங்கிலாந்தை போல 180 - 190 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆகியிருக்கும்.

இங்கிலாந்து 303
இறுதிக்கட்டத்தில் இந்திய அணிக்கு பெரும் சர்ப்ரைஸாக, கடைசி விக்கெட்டுக்கு சிராஜ் - பும்ரா கூட்டணி 33 ரன்கள் எடுத்தது. பும்ரா 28 ரன்களும், சிராஜ் 7 ரன்களும் எடுத்தனர். இந்த கடைசி விக்கெட் பார்ட்னர்ஷிப்பால், இந்திய அணிக்கு எதிர்பார்த்ததைவிட அதிக லீட் கிடைத்தது. முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 278 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் இந்தியாவுக்கு 95 ரன்கள் லீட் கிடைத்தது. அதாவது, இங்கிலாந்தை விட 95 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதையடுத்து, தனது 2ம் இன்னிங்ஸில் மிக மிக நிதானமாக, கவனமாக விளையாடிய இங்கிலாந்து 303 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் ஜோ ரூட் அட்டகாசமாக தனது சதத்தை பூர்த்தி செய்தார். அவர் 172 பந்துகளில் 109 ரன்கள் எடுத்ததால், இங்கிலாந்து 300 ரன்களை கடந்தது.

மிகப்பெரிய டார்கெட்
இந்தியா தரப்பில் பும்ரா 5 விக்கெட்டுகளையும் சிராஜ், தாகூர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனால், இந்தியாவுக்கு 209 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஓரளவு எளிதான இலக்கு என்றாலும், இங்கிலாந்து பந்துவீச்சை பார்க்கும் போது நிச்சயம் இது மிகப்பெரிய டார்கெட் தான். அந்த எண்ணத்துடன் களமிறங்கிய இந்திய அணியில் லோகேஷ் ராகுல் 38 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து பிராட் ஓவரில் ஆட்டமிழந்தார். நேற்றைய நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்திருந்தது. ரோஹித் மற்றும் புஜாரா தலா 12 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

ஜெயிக்குமா இந்தியா?
இந்தியா வெற்றிப்பெற இன்னும் 157 ரன்கள் தேவை. கைவசம் இன்னும் 9 விக்கெட்டுகள் உள்ளன. கடந்த சில டெஸ்ட் போட்டிகளில் சொதப்பி வரும் புஜாராவுக்கு இந்த போட்டி கடவுளாக கொடுத்த வெகுமதியாகக் கூட இருக்கலாம். அவர் மட்டும், நன்றாக நிலைத்து நின்று ஆடி அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தால், இழந்த பெயரை அப்படியே மீட்டுக் கொண்டுவந்து விடலாம். புஜாரா மட்டுமின்றி ரஹானே, கேப்டன் கோலி ஆகியோர் பொறுப்பாக நின்று விளையாடியாக வேண்டும். ஒவ்வொரு வீரரும் தலா 20 ரன்கள் அடித்தால் கூட இந்தியா வென்றுவிட முடியும். ஸோ, எந்த வீரராக இருந்தாலும், முழுக்க முழுக்க கட்டை போட்டு பொறுமையாக விளையாடும் யுக்தியை மாற்றி, தங்களது பேட்டிங்கில் அக்ரெஸிவ்வையும் கூட்டினால் வெற்றி நிச்சயம். எப்படி என்கிறீர்களா? எந்த ஒரு பேட்ஸ்மேன் களமிறங்கினாலும் அவரது ஸ்டிரைக் ரேட் 50 என்று வைத்துக் கொண்டால் போதுமானது. ஒருவர் களமிறங்கி 60 பந்துகளை சந்திக்கிறார் என்றால் அதில் 30 ரன்கள் அடித்தால் போதும். இது போன்று, களமிறங்கும் ஒவ்வொருவரும் சற்று ஆக்ரோஷத்தை கூட்டி விளையாடினால் வெற்றி உறுதி.


Click it and Unblock the Notifications











