பெங்களூரில் 'தப்பிய' இந்தியா கொச்சியில் கவிழ்ந்தது!
கொச்சி:
கொச்சியில் நடந்த 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், இந்தியாவை 84 ரன்களில் ஆஸ்திரேலிய அணி தோற்கடித்தது.
இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி பெங்களூரில் நடந்தது. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 307 ரன்கள் எடுத்தது. இதனால் இந்தியா வெற்றி பெறுமா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் அடை மழை வந்து இந்தியாவை காப்பாற்றி விட்டது. அந்த ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.இந்த நிலையில் 2வது ஒரு நாள் போட்டி கொச்சியில் நேற்று நடந்தது. இப்போட்டியும் மழையால் தடைபடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நல்ல வேளையாக மழை நின்றதால் ஆட்டம் எந்தத் தடங்கலும் இன்றி நடந்தது.
இந்திய கேப்டன் டோணி டாஸ் வென்று தேவையில்லாமல் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதை ஆஸ்திரேலிய அதிரடி பேட்ஸ்மென்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டனர்.
கில்லி போல ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் கில்கிறைஸ்ட் டக் ஆகி வெளியேறினார். இதனால் இந்திய ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். அடுத்து ஹோட்ஜும் 3 ரன்களில் போகவே ரசிகர்கள் மேலும் ஜாலியானார்கள்.
ஆனால் மலை போல வலுவாக நின்ற மாத்யூ ஹைடன், இந்திய பந்து வீச்சைப் பதம் பார்த்தார். வந்த பந்தையெல்லாம் அடித்து விளாசிய அவர் 75 ரன்களைக் குவித்து விட்டுத்தான் இடத்தைக் காலி செய்தார்.
பெங்களூர் போட்டியில் அபார சதம் அடித்த மைக்கேல் கிளார்க் இப்போட்டியில் 27 ரன்கள் எடுத்தார். முதல் 25 ஓவர்களுக்குத்தான் ஆஸ்திரேலியா திணறிக் கொண்டிருந்தது.
ஆனால் அதன் பின்னர் ஆட்டத்தின் போக்கே மாறி விட்டது. ஹாடினும், சைமண்ட்ஸும் இணைந்து இந்தியப் பந்து வீச்சாளர்களை விளாசித் தள்ளி, காய்ச்சி விட்டார்கள்.
இருவரும் அபாரமாக ஆடி தலா 87 ரன்களைச் சேர்த்தனர். இதில் ஹாடின் கடைசி வரை ஆட்டமிழக்கவே இல்லை.
இந்த ஜோடியின் அட்டகாசமான ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் இறுதியில் 6 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 306 ரன்களைக் குவித்தது.
முதல் போட்டியிலும் 300 ரன்களைக் கடந்தது ஆஸ்திரேலியா. இந்தப் போட்டியிலும் 300 ரன்களைக் கடந்தது குறிப்பிடத்தக்கது. இத்தனைக்கும் ரிக்கி பாண்டிங் அணியில் இல்லை, கில்கிறைஸ்ட் இன்னும் பார்முக்கு வரவில்லை. ஹைடன் இந்தப் போட்டியில்தான் விளையாடியுள்ளார். இப்படி சில பின்னடைவுகள் இருந்தும் கூட ஆஸ்திரேலியா அட்டகாசமாக ஆடி 300 ரன்களைத் தாண்டி தான் ஒரு ரியல் சாம்பியன் என்பதை நிரூபித்தது.
இந்தியத் தரப்பில் ஸ்ரீசாந்த் 3 விக்கெட்டுக்களை எடுத்தார். ஆனால் ரன்களை வாரிக் கொடுத்தார். அடிக்கடி டென்ஷன் ஆகி ஆஸ்திரேலிய வீரர்களுடன் மோதவும் செய்தார். மற்ற பந்து வீச்சாளர்களை ஆஸ்திரேலியர்கள் அடித்து விளாசி விட்டனர். இர்பான் பதான் மட்டுமே கொஞ்சம் ரன்களை விட்டுக் கொடுத்தார். அவருக்குக் கிடைத்தது 2 விக்கெட்டுக்கள்.
ரமேஷ் பவார் எதற்காக அணியில் இருக்கிறார் என்றே தெரியவில்லை. வீசிய ஐந்து ஓவர்களிலும் 30 ரன்களை வாரிக் கொடுத்தார். யுவராஜ் சிங், டெண்டுல்கர் ஆகியோர் போட்ட பந்துகளை விட கொடுத்த ரன்கள் அதிகம்.
இப்படியாக பந்து வீச்சில் சொதப்பிய இந்தியா, அடுத்து பேட்டிங் செய்ய களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக இறங்கிய டெண்டுல்கர் 16 ரன்கள் எடுத்தது போதும் என்று பெவிலியன் திரும்பி விட்டார். கெளதம் காம்பீர் 7 ரன்களில் ஓய்ந்தார்.
பெரிய ஸ்கோரை துரத்துவது என்றால், தொடக்க ஆட்டக்காரர்கள் கொஞ்சம் பொறுப்போடு நிலைத்து ஆடி நல்ல ஸ்கோரை எடுத்து பின்னால் வருபவர்களுக்கு துணையாக இருக்க வேண்டும்.
ஆனால் காம்பீரும், டெண்டுல்கரும் அப்படிச் செய்யத் தவறி விட்டனர். ராபின் உத்தப்பா சற்றே போராடி 41 ரன்கள் எடுத்தார். 20-20 உலகக் கோப்பையில் ரன் மழை பொழிந்த யுவராஜ் சிங் 10 ரன்களில் ஆட்டமிழந்தார்.
டிராவிட் 31 ரன்கள் சேர்த்தார். கேப்டன் டோணி பொறுப்போடு ஆடி 58 ரன்களைச் சேர்த்தார். இப்படியாக தட்டுத் தடுமாறி ஆடிய இந்தியாவின் ஆட்டம் 47.3 ஓவர்களில் முடிவுக்கு வந்தது. 222 ரன்களை மட்டுமே எடுத்து 2வது போட்டியில் தோல்வியைத் தழுவியது இந்தியா. இந்திய அணி இந்த அளவுக்கு ரன்களை எட்ட உதவியாக இருந்து எக்ஸ்ட்ரா ரன்கள்தான். அந்த வகையில் மட்டும் நமக்கு 27 ரன்கள் கிடைத்தது.
ஹாக் 3 விக்கெட்டுகளையும், கிளார்க் சகோதரர்கள் தலா 2 விக்கெட்டுகளையும், ஜான்சன் மற்றும் ஹோப்ஸ் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஆட்டநாயகனாக ஹாடின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பெங்களூர் ஒருநாள் போட்டியில் மழை வந்து இந்தியாவின் தோல்வியை காப்பாற்றியது போல் கொச்சியிலும் மழை வரும் என்று அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் வருணபகவான் கருணை காட்டவில்லை.
அடுத்த போட்டி நாளை பகல் ஆட்டமாக ஹைதராபாத்தில் நடைபெறுகிறது.
Story first published: Wednesday, December 7, 2011, 17:30 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications