10 ரன்களில் இந்தியா பரிதாப தோல்வி
வாண்டரர்ஸ், ஜோஹன்னஸ்பர்க்
20-20 உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியின் முதலாவது சூப்பர் 8 ஆட்டத்தில், இந்தியா 10 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோல்வியைத் தழுவியது.
20-20 உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் இன்று முதல் தொடங்கியுள்ளன. முதல் போட்டியில், இந்தியாவும், நியூசிலாந்தும் மோதின.டாஸ் வென்ற இந்திய கேப்டன் டோணி, பீல்டிங்கைத் தேர்வு செய்தார். இதையடுத்து நியூசிலாந்து முதலில் பேட் செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 190 ரன்கள் எடுத்தது.
இந்தியப் பந்து வீச்சு சொதப்பலாக இருந்ததால் நியூசிலாந்து வீரர்கள், இந்தியப் பந்து வீச்சை புரட்டி எடுத்தனர். குறிப்பாக யுவராஜ் சிங்கின் பந்துகளை செமத்தியாக பதம் பார்த்தனர்.
பின்னர் இந்தியா பேட் செய்தது. 191 ரன்கள் என்ற கடினமான இலக்கை இந்திய தொடக்க வீரர்கள் ஷேவாக்கும், கம்பீரும் லாவகமாக சமாளித்து நல்ல தொடக்கத்தைக் கொடுத்தனர்.
இருவரும் அதிரடியாக ஆடி ரன்களைக் குவித்தனர். இதனால் இந்திய ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். கம்பீர் 51 ரன்கள் எடுத்தார். ஷேவாக் 40 ரன்கள் சேர்த்தார்.
ஆனால் அதற்குப் பிறகு வந்த வீரர்கள் கல்யாண வீட்டிற்கு வந்தது போல வருவதும், போவதுமாக இருந்ததால் இந்திய ரன் சேர்ப்பு மளமளவமென்று சரிந்தது.
உத்தப்பா (0), யுவராஜ் சிங் (5) ஆகியோர் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர். டோணி 24 ரன்களை சேர்த்தார். திணேஷ் கார்த்திக் 17 ரன்களை மட்டுமே சேர்த்தார்.
ஸ்ரீசாந்த் மட்டும் அதிரடியாக ஆடி 21 ரன்களைச் சேர்த்துப் பார்த்தார். இருப்பினும் இந்தியாவால் ஆட்ட நேர இறுதியில், 180 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. இதனால் 10 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா பரிதாபமாக தோல்வியைத் தழுவியது.
நியூசிலாந்து கேப்டன் டேணியல் வெட்டோரி அற்புதமாக பந்து வீசி 4 விக்கெட்டுக்களை வீழ்த்தி தனது அணிக்கு வெற்றி தேடித் தந்தார்.
Story first published: Wednesday, December 7, 2011, 17:29 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications