மகளிர் டி20 உலகக் கோப்பை.. தென்னாப்பிரிக்காவிடம் இந்தியா தோல்வி.. ஃபீல்டர்களை விளாசிய ஹர்மன்பிரீத்
மான்செஸ்டர்: மகளிர் டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் முதல் தோல்வியைத் தழுவியுள்ளது. இந்த தோல்விக்குப் பின் அணியின் மோசமான ஃபீல்டிங் மற்றும் தவறவிடப்பட்ட கேட்சுகளே காரணம் என்று கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் சக வீராங்கனைகளை கடுமையாக விமர்சித்துள்ளார்.
மான்செஸ்டரில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் தொடக்க வீராங்கனை ஷஃபாலி வர்மா 31 ரன்களும், தீப்தி சர்மா 29 ரன்களும் எடுத்தனர். தனது 200வது சர்வதேச டி20 போட்டியில் விளையாடிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 24 ரன்கள் எடுத்தார். தென்னாப்பிரிக்கா தரப்பில் பந்துவீச்சில் மரிசான் காப் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

தொடர்ந்து 159 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி 19.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்திய அணியின் மோசமான ஃபீல்டிங் தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கு வழிவகுத்தது. குறிப்பாக, அதிரடியாக விளையாடி ஆட்டமிழக்காமல் 81 ரன்கள் குவித்த மரிசான் காப் 25 மற்றும் 65 ரன்களில் இருந்தபோது கொடுத்த இரண்டு எளிதான கேட்ச் வாய்ப்புகளை மாற்று ஃபீல்டரான ராதா யாதவ் தவறவிட்டார். அதேபோல் மற்றொரு வீராங்கனையான டாஸ்மின் பிரிட்ஸ் 18 ரன்களில் இருந்தபோது கொடுத்த கேட்ச் வாய்ப்பையும் இந்திய அணி கோட்டைவிட்டது.
தோல்வி குறித்துப் பேசிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், "எங்களுக்கு சில முக்கிய வாய்ப்புகள் கிடைத்தன, ஆனால் அவற்றை நாங்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை. ஸ்ரீ சரணி மற்றும் ஷஃபாலி சிறப்பாக பந்துவீசினர். ஆனால், ஃபீல்டர்கள் அவர்களுக்கு தகுந்த ஆதரவை வழங்கவில்லை. சர்வதேச தரத்திலான போட்டிகளில் இது போன்ற வாய்ப்புகளைத் தவறவிடுவது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். மரிசான் காப் கொடுத்த கேட்சுகளை தவறவிட்டது ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிட்டது" என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.
இந்திய அணி தனது அடுத்த லீக் போட்டியில் ஜூன் 25 அன்று வங்கதேசத்தையும், ஜூன் 28 அன்று ஆஸ்திரேலியாவையும் எதிர்கொள்ள உள்ளது. மேலும், அந்தப் போட்டிகளில் நிச்சயமாக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.


Click it and Unblock the Notifications