Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"இந்தியா கூட அயர்லாந்திடம் தோற்றது.. கிரிக்கெட் அழிந்துவிட்டது என்று.." மோஷின் நக்வி ஆவேசம்

இஸ்லாமாபாத்: இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி சந்தித்த தொடர் தோல்விகள் காரணமாக எழுந்துள்ள விமர்சனங்களுக்கு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் (பிசிபி) தலைவர் மோஷின் நக்வி மிகக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் முற்றிலும் அழிந்துவிட்டதாக சில முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் விமர்சித்த நிலையில், இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற பலமான அணிகளும் சிறிய அணிகளிடம் தோல்விகளைச் சந்தித்துள்ளதாக உதாரணம் காட்டி பேசி இருக்கிறார்.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 103 ரன்கள் வித்தியாசத்திலும், லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் 194 ரன்கள் வித்தியாசத்திலும் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்தது. இதை அடுத்து, 3-வது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக முகமது ரிஸ்வான், இமாம் உல் ஹக், சல்மான் அலி ஆகா, அமீர் ஜமால் உட்பட 7 வீரர்கள் அணியில் இருந்து நீக்கப்பட்டனர். மேலும், தலைமைப் பயிற்சியாளர் சர்பராஸ் அகமது மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் உமர் குல் ஆகியோரும் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, அவர்களுக்குப் பதிலாக மைக் ஹெசன் மற்றும் ஆஷ்லே நாஃப்கே ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இந்த அதிரடி நடவடிக்கைகள் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட்டில் பெரும் சர்ச்சை அரங்கேறி உள்ளது.

India Lost to Ireland - Pakistan Cricket Board Chairman Mohsin Naqvi on Critics

இது பற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மோஷின் நக்வி பேசியதாவது: "நான் உங்களிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன். தென்னாப்பிரிக்கா ஜிம்பாப்வேயிடமும், இந்தியா அயர்லாந்திடமும் தோற்றதே, அப்போது அங்கு கிரிக்கெட் விளையாட்டு முற்றிலும் அழிந்துவிட்டது என்று யாராவது கூறினார்களா? ஒரு விஷயம் நிச்சயம்; நமக்கு ஒரு வீரர் தேவைப்படும் போதெல்லாம் நாம் அவருக்கு ஆதரவாக நிற்போம். ஆனால், ஒருவர் தொடர்ந்து சிறப்பாகச் செயல்படவில்லை என்றால் நாம் என்ன செய்ய முடியும்? ஒவ்வொரு போட்டியும் நமக்கு முக்கியமானது. இந்த இரண்டு தோல்விகளுக்குப் பின்னால் பல காரணங்கள் உள்ளன.

ஆனால், இறைவனின் அருளால் அடுத்து நாம் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளைப் போலவே டெஸ்ட் போட்டியிலும் முன்னேற்றம் காண்போம். உண்மை என்னவென்றால், சிலர் என்னை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்று நினைக்கிறார்கள். நான் உங்களுக்குச் சில உண்மைகளைச் சொல்கிறேன். எங்களது புதிய பயிற்சியாளர்கள் வந்ததில் இருந்து, ஒருநாள் தரவரிசையில் நாம் 8-வது இடத்தில் இருந்து 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளோம். கடந்த 6 ஒருநாள் தொடர்களில் 4 தொடர்களை நாம் வென்றுள்ளோம். டி20 தரவரிசையில் 9-வது இடத்தில் இருந்து 6-வது இடத்திற்கு உயர்ந்துள்ளோம். நமது வெற்றிக்கான சதவீதம் 24 சதவீதத்தில் இருந்து 73 சதவீதமாக உயர்ந்துள்ளது.

நான் ஏதோ ஒரு குறிப்பிட்ட போட்டியைப் பற்றி மட்டும் பேசவில்லை. ஆனால் சிலர் பாகிஸ்தான் கிரிக்கெட் முற்றிலும் அழிந்துவிட்டது என்றே கூறி வருகின்றனர். நாம் தோற்கும் போதெல்லாம் எங்களை விமர்சிக்க அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால், சிலர் ஒட்டுமொத்த அமைப்பும் சீர்குலைந்துவிட்டது போல சித்தரிக்கிறார்கள். கிரிக்கெட்டில் எந்தச் சாதனையும் படைக்காதவர்கள் இப்படிப் பேசுவது நியாயமற்றது. நான் எப்போதும் முன்னாள் வீரர்களிடம் ஆலோசனைகளைக் கேட்கிறேன். இந்த போட்டியில் எங்களது ஆட்டம் மிகவும் மோசமாக இருந்தது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். இதற்கான சில காரணங்களை நாங்கள் ஏற்கனவே விவாதித்துள்ளோம்.

இந்திய டெஸ்ட் அணியில் ஷமிக்கு மட்டுமில்லை காஷ்மீர் பவுலருக்கும் கல்தா.. தேர்வுக் குழு எடுத்த முடிவு

இந்திய டெஸ்ட் அணியில் ஷமிக்கு மட்டுமில்லை காஷ்மீர் பவுலருக்கும் கல்தா.. தேர்வுக் குழு எடுத்த முடிவு

இந்த உண்மைகளை நீங்களே சரிபார்த்துக் கொள்ளுங்கள். இவை தவறாக இருந்தால் எங்களை கேள்வி கேளுங்கள். ஆனால், எனது வீரர்களின் தன்னம்பிக்கையைக் குலைப்பதை நிறுத்துங்கள். உங்களிடம் ஆதாரங்கள் இருந்தால், உண்மைகளை வைத்து எங்களை விமர்சியுங்கள், ஆனால் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்தாதீர்கள். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் பாகிஸ்தான் அடைந்துள்ள முன்னேற்றம் இந்த ஒட்டுமொத்த அணிக்கும் உரியது.

வீரர்களைத் தேர்வு செய்வதில் தவறுகள் நடப்பது உண்மைதான், அதற்கும் நாங்களே பொறுப்பேற்கிறோம். அடுத்து நாங்கள் என்ன செய்யப்போகிறோம் என்பதை நீங்கள் பார்ப்பீர்கள். ஆனால் இப்போது நடப்பது எல்லை மீறிச் செல்கிறது. என் மீது யாருக்காவது பிரச்சனை இருந்தால், என்னை தனிப்பட்ட முறையில் விமர்சியுங்கள், ஆனால் என் வீரர்களைக் குறிவைக்காதீர்கள்" என்று மோஷின் நக்வி ஆவேசமாகப் பேசியுள்ளார்.

தேர்வுக்குழு மெசேஜால் ஆத்திரமடைந்த 'ஹிட்மேன்'.. ரோஹித்தை வெளியேற்ற நடந்த திரைமறைவு வேலைகள்

Also Read

தேர்வுக்குழு மெசேஜால் ஆத்திரமடைந்த 'ஹிட்மேன்'.. ரோஹித்தை வெளியேற்ற நடந்த திரைமறைவு வேலைகள்
Story first published: Thursday, September 3, 2026, 12:56 [IST]
Other articles published on Sep 3, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+