செமி பைனலில் இந்தியாவுக்கு மீண்டும் காவி ஜெர்சி..? இப்பவே கதி கலங்கும் ரசிகர்கள்
லண்டன்: உலக கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்துடன் மோத வேண்டிய சூழல் ஏற்பட்டால், மீண்டும் காவி நிற ஜெர்ஸி அணிந்து விளையாட வேண்டிய இக்கட்டில் இருக்கிறது இந்திய கிரிக்கெட் அணி.
உலக கோப்பை லீக் சுற்று போட்டிகளின் முடிவில் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி இருக்கின்றன. அரையிறுதி போட்டிகளை உலகம் எங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.
வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றாலும் அரையிறுதிக்கு கை கொடுக்காது. அதனால் நியூசிலாந்து அணி தான் செமி பைனலுக்கு முன்னேற அதிக வாய்ப்புகள் உள்ளன.

2வது இடம்
அரையிறுதியில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணி, 4வது இடத்தில் உள்ள அணியுடன் மோதும். மற்றொரு அரையிறுதியில் 2வது இடம் பிடிக்கும் அணியும் 3வது இடம் பிடிக்கும் அணியுடன் களம் காணும். தற்போது புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது ஆஸ்திரேலியா. 2வது இடத்தில் இந்தியாவும், 3-வது இடத்தில் இங்கிலாந்தும் உள்ளது.

புள்ளிப்பட்டியல் மாறும்
ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய அணிகளுக்கு தலா ஒரு போட்டி பாக்கி இருக்கிறது. அதை பொறுத்து இறுதிக்கட்டத்தில் புள்ளிகளும், அணிகளின் இடமும் மாறும். உலக கோப்பையில் நாளைய லீக் போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோத உள்ளது. மற்றொரு போட்டியில் ஆஸ்திரலேியா, தென் ஆப்ரிக்கா அணியிடம் மோதுகிறது.

ஆஸி. அணியின் நிலை
இந்த போட்டிகளில் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்காவிடம் தோற்று, இந்தியா இலங்கையை வென்றால் புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறும். ஒரு வேளை ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் மாற்றமும் இருக்காது (ஆஸி. அணி வெற்றி பெற்று பட்டியலில் முதலிடத்தில் இருக்கவே விரும்பும்).

இங்கி. மோதல்
இந்தியா 2வது இடத்தில் நீடித்தால் அரையிறுதியில் இங்கிலாந்துடன் மோத வேண்டிய சூழல் உருவாகும். இந்த இடம்.... இப்போது ரசிகர்களின் மனநிலையை லேசாக உலுக்கி இருக்கிறது. காரணம்... அந்த போட்டியில் இந்தியா காவி நிற ஜெர்சியுடன் விளையாட வேண்டும்.

ஜெர்சி மாறாது
ஏன் என்றால்.. இங்கிலாந்தும் நீல நிற ஆடை அணிந்து வருவது தான் ஆகும். போட்டியை நடத்தும் நாடு என்பதால் அந்த அணியின் ஜெர்சியில் எவ்வித மாற்றமும் இருக்க போவதில்லை. இந்தியா, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்தால் தான் அரையிறுதியில் நீல நிற ஜெர்சியுடன் விளையாட முடியும்.

ரசிகர்கள் அதிருப்தி
ஏற்கனவே, லீக் போட்டியில் காவி நிற ஜெர்சி அணிந்து தான் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடியது. அந்த உடை ரசிகர்கள் யாருக்கும் பிடிக்கவே இல்லை என்று டுவிட்டரில் புலம்பி தள்ளினர். காவி நிற ஜெர்சியால் தான் இந்திய அணி அந்த போட்டியில் தோற்றது என்றும் டுவீட்டுகள் பறந்தன. அதனால் தான் மீண்டும் அதே அணி.. அதே ஜெர்சியா என்று ஜெர்க் ஆகின்றனர்.


Click it and Unblock the Notifications