ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி.. 7 அறிமுக வீரர்களை உடனடியாக அழைத்த பிசிசிஐ
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி வரும் சனிக்கிழமை ஜூன் 6ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெறாத போதும், ஜம்மு காஷ்மீர் வேகப்பந்து வீச்சாளர் அக்கிப் நபி டார் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணியின் பயிற்சி முகாமில் இணைக்கப்பட்டுள்ளார். ஜூன் 6 இல் தொடங்கும் டெஸ்ட் போட்டிக்கு ஆறு வலைப்பயிற்சி பந்துவீச்சாளர்களில் ஒருவராக அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.
அக்கிப் நபியுடன், ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடும் உ.பி. லெக் ஸ்பின்னர் ஜீஷன் அன்சாரியும் அழைக்கப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் அணியில் பல சுழற்பந்து வீச்சாளர்கள் களமிறங்க வாய்ப்புள்ளதால், இந்தத் தேர்வு முக்கியத்துவம் பெறுகிறது.

இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஷிவாங் குமார், இடது கை வேகப்பந்து வீச்சாளர் குர்ஜப்னீத் சிங், ஐபிஎல் வீரர் பிரின்ஸ் யாதவ், ஆஃப் ஸ்பின்னர் சரண்ஷ் ஜைன் ஆகியோரும் இந்த முகாமில் இணைந்து, போட்டி சூழ்நிலையை உருவகப்படுத்துவார்கள்.
பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பில், "குர்ஜப்னீத் சிங், அக்கிப் நபி, பிரின்ஸ் யாதவ், சரண்ஷ் ஜைன், ஜீஷன் அன்சாரி, ஷிவாங் குமார் ஆகியோர் டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணிக்கு உதவும் வலைப்பயிற்சி பந்துவீச்சாளர்களாக இணைந்துள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பிசிசிஐ வட்டாரம் பிடிஐ செய்தி நிறுவனத்திடம், "அக்கிப் நபி உட்பட ஏழு பேர் வலைப்பயிற்சிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். ஏழு நாட்களில் மூன்று கடினமான போட்டிகளில் விளையாடி, பயணித்த முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா போன்ற முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் கடும் வானிலையில் வலைப்பயிற்சியில் முழுமையாகப் பந்துவீச முடியாது. பேட்ஸ்மேன்களுக்குப் போதிய பயிற்சி அவசியம்" என்று தெரிவித்தது.
சிராஜ் மற்றும் பிரசித், ஐந்து நாட்களில் குவாலிபையர் 1, 2 மற்றும் இறுதிப் போட்டி என மூன்று ஐபிஎல் ஆட்டங்களில் ஆடினர். தர்மசாலா, சண்டிகர், அகமதாபாத் பயணங்களும் அவர்களுக்கு அதிக பணிச்சுமையை ஏற்படுத்தின.
ரஞ்சி டிராபியில் ஜம்மு காஷ்மீரை வழிநடத்தி, 60 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட் வீச்சாளராகத் திகழ்ந்த அக்கிப், தேசிய அணியில் இடம் பெறவில்லை. அவருக்குப் பதிலாக பஞ்சாபைச் சேர்ந்த குர்னூர் ப்ரார் சேர்க்கப்பட்டார்.
இந்த நீக்கம் சர்ச்சையை ஏற்படுத்த, முன்னாள் இந்திய கேப்டன் மற்றும் தேர்வு வாரியத் தலைவர் திலீப் வெங்சர்க்கர், "சிறந்த ஆட்டக்காரர்களுக்கு அங்கீகாரம் இல்லையென்றால் ரஞ்சி டிராபியின் மதிப்பு என்ன?" என்று காட்டமாக கேள்வி எழுப்பினார்.
அக்கிப், 15 பேர் கொண்ட முக்கிய அணியில் இன்னும் இடம்பிடிக்கவில்லை என்றாலும், மாற்று வீரர்களின் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா மற்றும் குர்னூர் ப்ரார் ஆகிய மூன்று வேகப்பந்து வீச்சாளர்களில் யாருக்கேனும் காயம் ஏற்பட்டால் மட்டுமே அக்கிப் முக்கிய அணிக்குள் சேர்க்கப்படுவார்.
இந்திய அணி தனது முதல் பயிற்சி முகாமமை செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடத்த திட்டமிட்டுள்ளது. எனினும், ஐபிஎல் இறுதிப் போட்டியில் பங்கேற்ற வீரர்கள் முதல் நாள் பயிற்சிகளைத் தவிர்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஏழு வீரர்கள் டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளனர். ஷுப்மன் கில் (கேப்டன்), பி. சாய் சுதர்சன், குர்னூர் ப்ரார், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், மானவ் சுதர், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இதில் அடங்குவர். இது ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அணிக்கு வலுவான அடித்தளத்தை அமைக்கிறது.


Click it and Unblock the Notifications

