3வது டெஸ்ட்-டிராவிட், டோணி அபார ஆட்டம்-50வது சதத்தை நழுவ விட்டார் சச்சின்

முதலில் சச்சின் டெண்டுல்கர் தனது 50வது சதத்தை நழுவ விட்டார். அடுத்த கேப்டன் டோணி 98 ரன்கள் எடுத்து 2 ரன்களில் சதத்தை நழுவ விட்டார். கடைசியாக இரட்டை சதத்தை நோக்கி முன்னேறிய ராகுல் டிராவிட் 191 ரன்களில் அவுட் ஆகி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தார்.
நியூசிலாந்துக்கு எதிரான முதல் இரு டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா டிரா கண்டது. இந்த நிலையில் தற்போது 3வது டெஸ்ட் போட்டி நாக்பூரில் தொடங்கி நடந்து வருகிறது.
இதில் நியூசிலாந்து தனது முதல் இன்னிங்ஸை 193 ரன்களுக்கு இழந்தது. இதையடுத்து இந்தியா தற்போது தனது முதல் இன்னிங்ஸை ஆடி வருகிறது.
தொடக்க ஆட்டக்காரர்களான ஷேவாக்கும், கம்பீரும் அபாரமான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர். கம்பீர் 78 ரன்களும், ஷேவாக் 74 ரன்களும் எடுத்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த டிராவிடும், சச்சினும் பிரமாதமாக ஆடினர். சச்சின் தனது 50வது டெஸ்ட் சதத்தை இதில் எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அவரும் அதற்கேற்ப பொறுமையாக ஆடி வந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக 61 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்து விட்டார்.
இருப்பினும் மறு முனையில் டிராவிட் நிதானமாக ஆடி சதம் போட்டார். தொடர்ந்து நிதானமாக ஆடிய அவர் இரட்டை சதத்தை நெருங்கிக் கொண்டிருந்தனர்.
மறு முனையில் சதத்தை நோக்கி நடை போட்டுக் கொண்டிருந்த கேப்டன் டோணி 98 ரன்கள் எடுத்திருந்தபோது எதிர்பாரதவிதமாக அவுட் ஆகி விட்டார். இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர்.
இந்த நிலையில் 191 ரன்களை எட்டியிருந்த டிராவிட் இரட்டை சதம் போடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் எதிர்பாராதவிதமாக ஆட்டமிழந்தார்.
இறுதியில் 8 விக்கெட் இழப்புக்கு 566 ரன்களை எடுத்திருந்த இந்தியா ஆட்டத்தை டிக்ளேர் செய்தது.
இதையடுத்து நியூசிலாந்து தனது 2வது இன்னிங்ஸை ஆடத்தொடங்கி ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 24 ரன்கள் எடுத்திருந்தது.
நியூசிலாந்து இந்தியாவை விட 349 ரன்கள் பின்தங்கியுள்ளது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:42 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications