இலங்கை போய் ஆஸி. வந்தது, டும்டும்டும்.. ஆஸி. போய் நியூசி. வந்தது டும்டும்டும்!
மும்பை: இலங்கை, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான தொடர்களை வென்றுள்ள இந்திய அணியுடன் மோதுவதற்காக நியூசிலாந்து கிரிக்கெட் அணி வந்துள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருதினப் போட்டித் தொடர் மும்பையில் நாளை துவங்குகிறது.
இலங்கைக்கு சென்று அந்த அணியுடனான 9 போட்டிகளிலும் வென்று திரும்பிய இந்திய அணி, சமீபத்தில், ஆஸ்திரேலியாவுடன் விளையாடியது. ஒருதினப் போட்டித் தொடரை, இந்தியா 4-1 என்று வென்றது. 3 டி-20 போட்டித் தொடர் தலா ஒரு வெற்றியுடன் சமனில் முடிந்தது.
இந்த நிலையில், மூன்று ஒருதினப் போட்டிகள், மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட நியூசிலாந்து அணி வந்துள்ளது. முதல் ஒருதினப் போட்டி மும்பையில் நாளை நடக்கிறது.

நியூசிலாந்துக்கு எதிராக 50வது வெற்றி
நிலவேம்பு கஷாயம் நல்லதா கெட்டதா என்று ஆராய்ச்சிகள் நடப்பது போல், மிகப் பெரிய ஆராய்ச்சிகள் தேவையில்லாமல், நியூசிலாந்துக்கு எதிரான 50வது ஒருதினப் போட்டி வெற்றியைப் பெறுவதற்கு இந்தியா தயாராக உள்ளது. நியூசிலாந்து இதுவரை 43 போட்டிகளில் வென்றுள்ளது.

தொடரை இழந்ததில்லை
கேப்டன் விராட் கோஹ்லியின் 200வது ஒருதினப் போட்டியாகவும் இது அமைந்துள்ளது. இந்தியாவில் நடந்துள்ள இந்தியா- நியூசிலாந்து தொடர்களை இதுவரை இந்தியா இழந்ததில்லை. அந்த சாதனையை இந்தத் தொடரிலும் தொடர்வதற்கு பல இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி தயாராக உள்ளது.

ஐசிசி தரவரிசையில் மீண்டும் முதலிடம்
நாளை நடக்கும் போட்டியில் வெல்வதன் மூலம், ஐசிசி தரவரிசையில் மீண்டும் முதலிடத்தை இந்தியா பிடித்துவிடும். வரும் 25ல் புனே, 29ல் கான்பூரில் அடுத்த ஒருதினப் போட்டிகள் நடக்க உள்ளன.

திடீரென அசத்தக் கூடியது நியூசி
கிரேட் காளிக்கு பக்கத்தில் விராட் கோஹ்லி நின்றால் எப்படி இருக்குமோ அதுபோலதான், தற்போதுள்ள இந்திய அணிக்கு முன் நியூசிலாந்து அணியும் இருக்கும். அதே நேரத்தில், எப்போது எந்தப் பிரச்னையை உருவாக்குவார்கள் என்று பா.ஜ.,வை புரிந்துக் கொள்ள முடியாததைப் போல, திடீரென அசத்தக் கூடியது நியூசிலாந்து அணி.


Click it and Unblock the Notifications