டெல்லி: இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே தாக்குதல் நிறுத்த ஒப்பந்தம் நேற்று ஏற்படுத்தப்பட்ட நிலையில், அடுத்த மூன்று மணி நேரத்தில் காஷ்மீர் பகுதியில் மீண்டும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் சம்பவங்கள் நடந்தன. பாகிஸ்தான் மீண்டும் தாக்குதலை துவக்கி விட்டதாக பரபரப்பு எழுந்தது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியதாகப் பலரும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.
இந்த நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக் கடுமையான தொனியில் ஒரு பதிவை வெளியிட்டு பாகிஸ்தானை விமர்சித்திருக்கிறார். "நாய் வால் எப்போதும் சுருண்டுதான் இருக்கும்" என்ற பொருளில் உள்ள இந்தி வாசகம் ஒன்றை அவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கிறார். தமிழில் 'நாய் வாலை நிமிர்த்த முடியாது' என்ற பழமொழியைத்தான் இவ்வாறு அவர் இந்தியில் சொல்லி இருக்கிறார்.

நாய் வாலை நிமிர்த்த முடியாது என்பது போல, பாகிஸ்தானை திருத்த முடியாது என சேவாக் விமர்சித்து இருக்கிறார். வீரேந்தர் சேவாக்கின் இந்தப் பதிவை பலரும் வரவேற்றுள்ளனர், பாகிஸ்தானை விமர்சித்து வருகின்றனர். சர்வதேச அரங்கில் தாங்கள் தாக்குதல் நடத்த மாட்டோம் என வாக்குறுதி அளித்துவிட்டு, அடுத்த மூன்று மணி நேரத்திலேயே அதை மீறுவது என்பது பாகிஸ்தானின் உண்மையான முகத்தை வெளிக்காட்டுவதாகச் சிலர் விமர்சித்திருக்கின்றனர்.
வேறு சிலரோ, பாகிஸ்தான் அரசு நிர்வாகம் போர் நிறுத்தத்தை ஒப்புக்கொண்ட நிலையில் ராணுவம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதைத்தான் இந்தச் சம்பவங்கள் சுட்டிக்காட்டுகின்றன என்றும், பாகிஸ்தானில் ஒருங்கிணைந்த நிர்வாகம் இல்லை, அங்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்று மற்றவர்களும் இந்தச் சூழ்நிலையை விமர்சித்து வருகின்றனர்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் தாக்குதல் சம்பவங்களால் 2025 ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டிருப்பதால், மீண்டும் ஐபிஎல் தொடரை துவக்குவது குறித்து பிசிசிஐ ஆலோசித்து வருகிறது.