மும்பை: 2026 டி20 உலககோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிப்போம் என பாகிஸ்தான் மிரட்டியுள்ள நிலையில், அதற்கான உண்மையான காரணம் என்ன என்பது பற்றி தற்போது தகவல் வெளியாகி உள்ளது. ஐசிசி மூலம் அதிக பணம், இந்தியாவுடன் இருதரப்பு கிரிக்கெட் தொடர்கள் மீண்டும் தொடங்குதல், மற்றும் வீரர்களுக்கு இடையிலான கைக்குலுக்கல் முறையை மீண்டும் கொண்டு வருவது போன்ற கோரிக்கைகளை பாகிஸ்தான் முன் வைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் புறக்கணிப்பு அச்சுறுத்தலை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒரு பேரம் பேசும் கருவியாகப் பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த வாரம், பாகிஸ்தான் அரசு தங்கள் அணி இலங்கைக்குச் செல்ல அனுமதித்தாலும், பிப்ரவரி 15 அன்று கொழும்பில் இந்தியாவுக்கு எதிராக விளையாட தடை விதித்தது. இதுகுறித்து, பிசிபி ஐசிசி துணைத் தலைவர் இம்ரான் குவாஜாவுடன் பேச்சு வார்த்தை நடத்துகிறது. "டி20 உலகக் கோப்பையின் அதிக வருவாய் ஈட்டும் போட்டிக்கு இதன் மூலம் தீர்வு காணப்பட்டுள்ளதக செய்திகள் வெளியாகியுள்ளன.

டி20 உலகக் கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான் மோதல், ஐசிசிக்கு மிகப்பெரிய வருவாய் ஈட்டும் போட்டியாகும். இப்போட்டியில் முக்கிய அங்கம் வகிப்பதால் அதிகப் பணப் பங்கீட்டை பிசிபி கோருகிறது. தற்போது, ஐசிசியின் வருடாந்திர வருவாய் பங்கீட்டில் பிசிபிக்கு 34.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கிடைக்கிறது, இது இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுக்குப் பிறகு நான்காவது பெரிய பங்கு.
அதிக வருவாய் ஈட்டும் போட்டியில் முக்கிய பங்கு வகிப்பதால், பாகிஸ்தானுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்பது அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகிகளின் நீண்டகாலக் கருத்தாகவே உள்ளது.இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதட்டங்களால் இருதரப்பு கிரிக்கெட் தொடர்கள் நீண்டகாலமாக முடங்கியுள்ளன. இந்த உறவுகளை மீண்டும் தொடங்க பிசிசிஐ-யை சம்மதிக்க வைக்க ஐசிசி தலையிட வேண்டும் என பாகிஸ்தான் கோருகிறது.
இருப்பினும், இது இந்திய அரசின் முடிவு என்பதால் இக்கோரிக்கை நிறைவேற வாய்ப்பில்லை."முழுத் தொடர்களையும் விளையாடாதது அரசின் முடிவு. பிசிசிஐக்கு அதில் பங்கில்லை. இதனால், இருதரப்பு தொடரை மீண்டும் நடத்த ஐசிசி பேச்சுவார்த்தை நடத்தவும் பாகிஸ்தான் முயல்கிறது.
கடந்த ஆண்டு பஹல்காம் தாக்குதலை அடுத்து, இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்துவிட்டனர். இந்த நிலையை மாற்ற பிசிபி முயற்சி செய்கிறது. "விளையாட்டின் நெறிமுறைகளுக்கு இணங்கி, இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்கி, கண்ணியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். இதை பாகிஸ்தான் ஐசிசி-யிடம் எடுத்துரைக்கும் என தெரிகிறது.