கொழும்பு: 6 மாதங்களுக்கு பின் இந்திய அணிக்கு திரும்பிய நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் சதம் விளாசி அசத்தியுள்ளதால், ஸ்ரேயாஸ்ன் ஐயர் இனி பேக் அப் வீரராக மட்டுமே செயல்படுவார் என்று பார்க்கப்படுகிறது.
இந்திய அணியின் நட்சத்திர வீரர் கேஎல் ராகுல். ஐபிஎல் தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக நீண்ட நாட்களாக ஓய்வில் இருந்தார். இதன்பின் அறுவை சிகிச்சை செய்த பின், என்சிஏவில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தார் கேஎல் ராகுல். இந்த நிலையில் வெஸ்ட் இண்டிஸ் தொடருக்கோ, அயர்லாந்து டி20 தொடருக்கோ கேஎல் ராகுல் தேர்வு செய்யப்படவில்லை. அதேபோல் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாததால், ஆசியக் கோப்பையின் முதல் 2 போட்டிகளிலும் கேஎல் ராகுல் பங்கேற்கவில்லை.

அதுமட்டுமல்லாமல் காயத்தில் இருந்து மீண்ட பின் நேரடியாக உலகக்கோப்பை தொடருக்கும் கேஎல் ராகுல் தேர்வு செய்யப்பட்டார். இதனால் கேஎல் ராகுல் மீதான விமர்சனங்கள் அதிகமாகியது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி நேரத்தில் முதுகு பிடிப்பு ஏற்பட்டதால், ஸ்ரேயாஸ் ஐயர் அணியில் இருந்து நீக்கப்படுவதாக ரோகித் சர்மா தெரிவித்தார். அதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாக தான் ஸ்ரேயாஸ் ஐயர் பவுன்சர் பந்துகளை எதிர்கொள்ள பயிற்சி மேற்கொண்டார்.
பின்னர் அவருக்கு பதிலாக கேஎல் ராகுல் களமிறக்கப்பட்டார். இதனால் கேஎல் ராகுல் ஆட்டம் மீதான எதிர்பார்ப்பு ஏற்பட்டது. நேற்றைய நாள் ஆட்டத்தில் நிதானம் காட்டிய காட்டிய கேஎல் ராகுல், இன்றைய நாளில் தொடக்கத்திலேயே இண்டெண்ட் காட்டினார். மழை வருவதற்கான வாய்ப்புகள் இருப்பது தெரிந்த பின், ஆட்டத்தை அதிரடிக்கு மாற்றினார். இதன் காரணமாக 60 பந்துகளில் அரைசதம் கடந்த கேஎல் ராகுல், 100 பந்துகளில் 100 ரன்கள விளாசி தள்ளினார்.
6 மாதங்களுக்கு பின் இந்திய அணிக்கு திரும்பிய கேஎல் ராகுல் தனது முதல் போட்டியிலேயே சதம் விளாசி அசத்தியதோடு தரமான கம்பேக்கையும் கொடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் மிடில் ஆர்டரில் 26 இன்னிங்ஸ்களை ஆடியுள்ள கேஎல் ராகுல் 3 சதங்கள், 7 அரைசதங்களை விளாசி தனது தரத்தை இந்திய அணிக்கும், ரசிகர்களுக்கும் நிரூபித்து காட்டியுள்ளார். இதனால் ஸ்ரேயாஸ் ஐயர் இனி உலகக்கோப்பை தொடருக்கான பேக் அப் வீரராக இருப்பார் என்றே பார்க்கப்படுகிறது.