கொழும்பு: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்தப் போட்டியில் நிகழ்ந்த சுவாரஸ்யங்களை வைத்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் உருவாக்கிய மீம்ஸை பார்க்கலாம்.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி தனது 47வது ஒருநாள் சதத்தை விளாசி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். அதுமட்டுமல்லாமல் விராட் கோலியின் ஆட்டம் மீண்டும் உச்சத்திற்கு வந்தது கண்கூடாகவே தெரிந்தது. இதனை கொண்டாடும் வகையில் ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் சொல்லும், "இங்க நான் தான் கிங்" என்று இருவரின் படத்தையும் இணைத்து விராட் கோலிக்கு கிரீடம் அணிவித்த உருவாக்கப்பட்டுள்ள மீம் வெறித்தனம்.

நேற்றைய ஆட்டத்தில் நசீம் ஷா பந்தில் எம்சிஜி மைதானத்தில் அடிக்கப்பட்ட சிக்சரை விராட் கோலி மீண்டும் அடித்த ஷாட்டும், கடைசி பந்தில் யார்க்கர் வீச முயன்ற ஃபஹீம் அஷ்ரப் பந்துவீச்சில் டவுன் தி டிராக் இறங்கி வந்து ஸ்ட்ரைட் திசையில் அடிக்கப்பட்ட இரு ஷாட்களும் ரசிகர்களை பிரமிக்க வைத்தது. இந்த புகைப்படத்தையும் பதிவிட்டு, மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதி சொல்லும், "இந்த வாத்தி ஒரு மாதிரி மண்டைக்குள்ள ஓடிட்டே இருக்கான்" என்று வசனத்தை விராட் கோலிக்கு ஏற்றவாறு மாற்றி, "இந்த ஷாட் ஒரு மாதிரி மண்டைக்குள்ள ஓடிட்டே இருக்கு" என்று சொல்வது போல் உருவாக்கப்பட்டுள்ள மீம் வேற லெவல்.

அதேபோல் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கேஎல் ராகுல் மற்றும் விராட் கோலி இருவருமே கடைசி பந்து வரை விக்கெட் கொடுக்காமல் சதம் விளாசி மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்கள் இருவரும் பெவிலியன் திரும்பும் புகைப்படத்தையும், மங்காத்தா கிளைமேக்ஸில் அஜித் -அர்ஜூன் இருவரும் பணத்தை கொள்ளையடித்து வரும் புகைப்படத்தையும் இணைத்து உருவாக்கப்பட்டுள்ள மீம் மிரட்டல் ரகம்.

பாகிஸ்தான் அணி 357 ரன்களை இலக்கை எட்ட முடியாவிட்டாலும் சவால் அளிக்கும் என்று பார்க்கப்பட்டது. ஆனால் வெறும் 128 ரன்களுக்கே சுருண்டது. இதனை பரிதாபங்கள் கோபி ஸ்டைலில் வந்த வடக்கு பரிதாபங்கள் வீடியோவில் வருவது, "நானாவது பரவால.. எங்க பெரியப்பா ஒருவர் ஜார்கண்ட்ல விவசாயம் பார்த்துட்டு இருக்கார்.. அவர்லாம் இன்னைக்கு இருந்துருந்தா மொத 10 ஓவருமே இவருக்கு கொடுத்து உங்கள 50லயே முடிச்சுருப்பார்" என்று குல்தீப் யாதவை காட்டி ரோகித் சர்மா பதில் சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் உச்சக்கட்ட காமெடி ஃபீல்.

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ரைவல்ரி ஆட்டம் என்பதால் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் பாகிஸ்தான் அணி வெறும் 128 ரன்களுக்கு சுருண்டதால் விரைவாகவே ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதனை கிண்டல் செய்யும் வகையில், "என்ன ரைவல்ரி மேட்ச்-சோ.. இவ்ளோ சீக்கிரம் முடிஞ்சுருச்சு" என்று சந்தானம் சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் குபீர் ரகம்.