அகமதாபாத் : இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று 48 மணி நேரம் ஆகிவிட்ட நிலையில் ஒன்றின் பின் ஒன்றாக பல சர்ச்சைகள் வெளிவந்து இருக்கிறது. பாகிஸ்தான் வீரர்களை நோக்கி ஜெய்ஸ்ரீராம் என ரசிகர்கள் கத்தியது தற்போது பெரிய பூதாகரமாக மாறி இருக்கிறது.
இதேபோன்று பாகிஸ்தான் வீரர்கள் பில்டிங் செய்யும் போது ரசிகர்கள் பேப்பர் ராக்கெட் விட்டு வெறுப்பேற்றிய சம்பவமும் நடைபெற்ற இருந்தது. மேலும் பலரின் செல்போன்கள் காணாமல் போய்விட்டதாக புகார் எழுந்துள்ளது.

இந்த நிலையில் அனைத்திற்கும் மேலாக போட்டியை பார்க்க வந்த ரசிகர் ஒருவர் பெண் போலீசாரிடம் தகாத முறையில் நடந்து கொண்டிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. மைதானத்தில் இருக்கையில் அமர்ந்து போட்டியை பார்த்துக் கொண்ட ரசிகர் ஒருவர் அங்கு நின்ற பெண் போலீசாரை தகாத முறையில் கிண்டல் செய்து இருக்கிறார். முதலில் பொறுத்துக் கொண்டிருந்த பெண் போலீசார் பிறகு ஆத்திரமடைந்து அந்த ரசிகரை எச்சரித்து இருக்கிறார்.
அதற்கு அந்த ரசிகரும் குரல் எழுப்பியதால் அந்த போலீசார் பளார் என அந்த ரசிகரின் கன்னத்தில் அறைந்தார்.இதனால் அந்த ரசிகரும் போலீசாரை அடிக்க முற்பட்டபோது அங்கு இருந்த ரசிகர்கள் இருவரையும் தடுத்து சமாதானப்படுத்தினர். பெண் போலீசார் அந்த ரசிகரை அழைத்துச் செல்ல முற்பட்டபோது ரசிகர்கள் வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. இது போன்ற செயலில் ஈடுபடும் ரசிகர்களை இனி கிரிக்கெட் மைதானத்திற்குள்ளே வர அனுமதிக்க கூடாது என்றும் அந்த ரசிகரை போலீசார் கைது செய்திருக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். போலீஸருக்கே பாதுகாப்பு இல்லாத நிலைமை தான் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இருப்பதாகவும் ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.