கொழும்பு: இந்தியா அணிக்கு எதிராக நாளை நடக்கவுள்ள ஆசியக் கோப்பை சூப்பர் 4 போட்டிக்கான பிளேயிங் லெவனை பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் அறிவித்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றுக்கான ஆட்டம் நாளை நடக்கவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். கொழும்புவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்தாலும், இரு அணி வீரர்களும் இண்டோரிலேயே பேட்டிங் பயிற்சியை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் கொழும்பு வானிலை தற்போது போட்டி நடப்பதற்கு சாதகமாக உள்ளது. இதனால் நாளை நடக்கவுள்ள இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்த நிலையில் இந்திய அணிக்கு எதிராக நாளை களமிறங்க உள்ள பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவனை அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் அறிவித்துள்ளார்.
அந்த அணியில் இந்திய அணிக்கு எதிராக ஆடிய அணியில் இடம்பெற்ற வீரர்களில் ஒரேயொருவர் மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சுழற்பந்துவீச்சாளரான முகமது நவாஸ் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஃபஹீம் அஷ்ரப் சேர்க்கப்பட்டுள்ளார். இதன் மூலம் பாகிஸ்தான் அணி சிறந்த 4 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கவுள்ளது தெரிய வந்துள்ளது.
ஏற்கனவே ஷாகின் அப்ரிடி, ஹாரிஸ் ராஃப், நசீம் ஷா ஆகியோர் இருக்கும் நிலையில், ஃபஹீம் அஹ்ரப்-வும் இணைந்துள்ளார். இவர் வங்கதேச அணிக்கு எதிரான சூப்பர் 4 போட்டியில் 7 ஓவர்கள் வீசி 27 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் சுழற்பந்துவீச்சாளராக ஷடாப் கான் மட்டுமே இருக்கும் சூழலில், அவருக்கு உறுதுணையாக இஃப்திகார் அஹ்மத் இருக்கிறார். கடந்த போட்டியிலும் இஃப்திகார் அஹ்மத் பந்துவீசி இருந்தார்.
மற்றபடி இமாம் உல் ஹக்,. ஃபக்கர் ஜமான், பாபர் அசாம், ரிஸ்வான், சல்மான் அலி ஆகா, நசீம் ஷா, ஷாகின் அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ராஃப் உள்ளிட்டோர் அணியில் தொடர்கின்றனர். ஒரு நாளுக்கு முன்பாக பாகிஸ்தான் தங்களது பிளெயிங் லெவனை அறிவித்துள்ளது அவர்களின் நம்பிக்கையை காட்டுவதாக உள்ளது. இருப்பினும் இந்திய அணி வெல்லும் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.