கொழும்பு : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் சூப்பர் போர் லீக் சுற்று ஆட்டத்தில் மழை தற்போது குறிக்கிட்டு இருப்பதால் ஆட்டம் தடைப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் ரிசர்வ் டேவிலாவது ஆட்டம் தொடங்கப்படுமா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று இரவில் இருந்தே மழை கொட்டி தீர்த்து வருகிறது. தற்போது மழை விட்டு விட்டு பெய்வதால் மைதானம் முழுவதும் தார்பாயால் மூடப்பட்டிருக்கிறது.

ஒருவேளை இன்று ஆட்டம் தொடங்கப்பட்டால் யாருக்கு சாதகமாக அமையும் என்பதை தற்போது பார்க்கலாம். தற்போது மழை பெய்வதை பார்த்தால் ஓவர்கள் நிச்சயமாக குறைக்கப்படும். இதன் மூலம் இரண்டாவதாக பந்துவீச்சை தேர்வு செய்துள்ள பாகிஸ்தான் அணிக்கு தான் வெற்றி வாய்ப்பு சாதகமாக இருக்கும். போட்டி 20 ஓவராக குறைக்கப்பட்டால் பாகிஸ்தானுக்கு வெற்றி இலக்கு 181 ரன்கள் என்று மாற்றி அமைக்கப்படும்.
இதன் மூலம் பாகிஸ்தான் அணி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்க்க முடியும். ஆனால் இன்று காலை முதலே கன மழை பெய்து வருவதால், ஆடுகளத்தின் தன்மை முற்றிலுமாக மாறி இருக்கும். மைதானம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளது. ஒருவேளை போட்டி 40 அல்லது 35 ஓவராக குறைக்கப்பட்டால் இந்திய அணி எஞ்சிய ஓவர்களை பேட்டிங் செய்யும்போது ரன் சேர்க்க கடினமாக இருக்கும்.
இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்யும்போது மைதானத்தின் ஈரப்பதம் கொஞ்சம் குறைந்திருக்க வாய்ப்பு இருக்கும். ஆனால் பந்து பேட்டிற்கு வருவதில் தோய்வு ஏற்படும். இதுவும் பாகிஸ்தானுக்கு கடினமாக மாறினாலும் இந்தியாவின் சுழற் பந்து என்பது நிச்சயம் ஈரப்பதமான ஆடுகளங்களில் எடுபடாது.
மேலும் எந்த இலக்கை எட்ட போகிறோம் என்பது பாகிஸ்தானுக்கு தெரிந்து விடும் என்பதால் அது அவர்களுக்கு கூடுதல் சாதகமாக இருக்கும். ஒருவேளை போட்டி 50 ஓவர்களாக நடந்தால் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும்.ஆனால் ஓவர்கள் குறைக்கப்பட்டால் பாகிஸ்தான் அணிக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கும். இதனால் போட்டியை குறைந்தபட்சம் 20 ஓவர் களாக நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது.