மற்றொரு தொடர் வெற்றிக்கு இந்தியா தயார்
பல்லேகலை: இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்று வென்று அசத்திய இந்திய கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட ஒருதினப் போட்டித் தொடரையும் வெல்வதற்கு தயாராக உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி, இலங்கைக்கு சென்றுள்ளது. அங்கு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை, 3-0 என்று வென்று புதிய சாதனை படைத்தது.

அதைத் தொடர்ந்து, 5 போட்டிகள் கொண்ட ஒருதினப் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்த, 2 போட்டிகளிலும் வென்று, 2-0 என, இந்தியா முன்னிலையில் உள்ளது. 3வது ஒருதினப் போட்டி, பல்லேகலையில் நாளை நடக்க உள்ளது.
இந்தப் போட்டியிலும் வெல்வதற்கு இந்திய அணிக்கே அதிக சாதகமான சூழ்நிலை உள்ளது. இருப்பினும், இரண்டாவது ஒருதினப் போட்டியில், பேட்டிங்களில் முதல்வரிசை வீரர்கள் சொதப்பினர். கடைசியில், புவனேஷ்குமாரின் உதவியுடன், வெற்றியை உறுதி செய்தார் மகேந்திர சிங் தோனி.
மேலும், 2வது ஒருதினப் போட்டியில், இலங்கையின் அகில தனஞ்சயாவின் பந்துவீச்சு மிக அபாரமாக இருந்தது. 54 ரன்களைக் கொடுத்து, 6 விக்கெட்களை அவர் வீழ்த்தினார். ஏதோ மேஜிக் செய்வது போல இருந்தது அவருடைய பந்துவீச்சு.
நாளை நடக்கும் மூன்றாவது போட்டியில் கவனிக்க வேண்டியவராக அவர் மாறியுள்ளார். மெதுவாக பந்துவீசியதால், இரண்டு போட்டிகளில் விளையாட கேப்டன் உபுல் தரங்காவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால், இந்தப் போட்டியில் அவர் விளையாட மாட்டார். சமர குபுகதாரா கேப்டனாக செயல்படுவார்.
2019 உலகக் கோப்பைக்கான அணியை தேர்வு செய்வதற்காக, பேட்டிங் வரிசையில் புது புது பரிசோதனைகளை கேப்டன் விராட் கோஹ்லி செய்து வருகிறார். நாளை நடக்கும் போட்டியின் தொடரை வெல்ல வேண்டும் என்பதால், எந்த புதிய சோதனையிலும் அவர் ஈடுபட மாட்டார் என்று எதிர்பார்க்கலாம்.
அதே நேரத்தில் இளம் பந்து வீச்சாளர்களுக்கு இது மிகப் பெரிய வாய்ப்பாக அமையும்.
Story first published: Saturday, August 26, 2017, 18:09 [IST]
Other articles published on Aug 26, 2017


Click it and Unblock the Notifications