விரட்டி விரட்டி வெளுத்த ரோகித் - ஜெய்ஸ்வால்.. வரலாற்றை உருவாக்கிய இந்தியா.. பேட்ஸ்மேன்கள் சாதனை!
ட்ரினிடாட்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக 100 ரன்களை சேர்ந்த அணி என்ற புதிய சாதனை இந்தியா படைத்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 438 ரன்கள் விளாசியது. அதிகபட்சமாக விராட் கோலி 121 ரன்கள் விளாசினார். இதன்பின் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 255 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இந்திய அணி தரப்பில் சிராஜ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இதனால் இந்திய அணி 183 ரன்கள் முன்னிலை பெற்றது. இதன்பின் இரண்டாவது இன்னிங்ஸ் இந்திய அணிக்காக ரோகித் சர்மா - யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர். இருவரும் களமிறங்கிய போதே, அதிரடியாக விளையாட வேண்டும் என்று முடிவுடன் களமிறங்கியதாக தெரிகிறது. அதற்கேற்ப ஜெய்ஸ்வால் - ரோகித் இணை முதல் ஓவரிலேயே அதிரடியை தொடங்கியது.
முதல் ஓவரிலேயே ஜெய்ஸ்வால் சிக்சரும், பவுண்டரியும் விளாசி அசத்த, பின்னர் முழுக்க முழுக்க ஆட்டத்தை ரோகித் சர்மா கையில் எடுத்துக் கொண்டார். ஒவ்வொரு ஓவருக்கு சிக்சரும், பவுண்டரியும் பறந்துகொண்டே இருந்தது. இதன் மூலம் 5.3 ஓவர்களில் இந்திய அணி 50 ரன்களை எட்டியது. அதேபோல் டெஸ்ட் வரலாற்றில் இந்திய அணி தரப்பில் அதிவிரைவாக 50 ரன்கள் விளாசி சாதனை படைக்கப்பட்டது.
தொடர்ந்து அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா 35 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார். சிறப்பாக ஆடிய அவர், 44 பந்துகளில் 57 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். தொடர்ந்து சுப்மன் கில் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை சேர்ந்தது. தொடர்ந்து அதிரடியாக விளையாட, இந்திய அணி 12.2 ஓவர்களில் 100 ரன்களை கடந்தது. இதன் மூலம் இந்திய அணி விரைவாக 100 ரன்களை டெஸ்ட் கிரிக்கெட்டில் விளாசிய அணி என்ற சாதனையை படைத்துள்ளது.
இந்த அதிரடியான ஆட்டம் மூலம் இந்திய அணியின் முன்னிலை 301 ரன்களாக உள்ளது. தற்போது மழை குறுக்கிட்டதால், ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்திய அணியின் முன்னிலை 350 ரன்களை கடக்கும் போது, ரோகித் சர்மா டிக்ளேர் செய்ய வாய்ப்பிருப்பதாக பார்க்கப்படுகிறது. ஆனால் மழை அடிக்கடி தொடர்ந்து வருவதால், ஆட்டம் டிராவில் முடிய வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications