பார்டர் கவாஸ்கர் தொடரை கைப்பற்றிய இந்தியா.. டெல்லி டெஸ்டில் அபார வெற்றி..இந்தியாவுக்கு 100வது வெற்றி
டெல்லி : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 2க்கு0 என்ற கணக்கில் முன்னிலை உள்ள இந்திய அணி, நடப்பு சாம்பியன் என்ற முறையில் பார்டர் கவாஸ்கர் தொடரை கைப்பற்றியது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி ஹாண்ட்ஸ்கோம்ப் மற்றும் உஸ்மான் கவாஜா ஜோடி அபாரமாக விளையாடி அரைசதம் அடித்தனர்.இதனால் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 263 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனையடுத்து முதல் இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணியில் முன்வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.ஒரு கட்டத்தில் 139 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்து இந்திய அணி தடுமாறியது.

ஆஸ்திரேலியா ஆதிக்கம்
எனினும் அக்சர் பட்டேல் அபாரமாக விளையாடியதால் இந்திய அணி 262 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து ஒரு ரன் வித்தியாசத்தில் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் அதிரடியாக விளையாடியது. உஸ்மான் கவாஜா 6 ரன்களில் ஆட்டமிழக்க, டிராவிஸ் ஹேட் மற்றும் லாபஸ்சேன் ஆகியோர் அதிரடியாக விளையாடி இந்தியாவுக்கு நெருக்கடி அளித்தனர். 61 ரன்களுக்கு ஒரு விக்கெட் இழப்புடன் 3வது நாள் ஆட்டத்தை ஆஸ்திரேலிய அணி தொடர்ந்தது.

தலை கீழ் மாறியது
அபாரமாக விளையாடிய டிராவிஸ் ஹேட் மற்றும் ஸ்மித் ஆகியோரின் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்திய நிலையில் ஆஸ்திரேலிய அணியின் சரிவு தொடங்கியது. மார்னஸ் லாபஸ்சேன் விக்கெட்டை ஜடேஜா கைப்பற்ற, அதன் பிறகு பேட்டிங் செய்ய வந்த ஆஸ்திரேலிய வீரர்கள் மின்னல் வேகத்தில் பெவிலியன் நோக்கி அணி வகுப்பு நடத்தினர். . ஆஸ்திரேலிய அணியில் 8 வீரர்கள் ஒற்றை இலக்கம் ரன்களில் ஆட்டமிழந்தனர்.

115 ரன்கள் இலக்கு
இதனால் ஆஸ்திரேலிய அணி 113 ரன்களுக்கு சுருண்டது. ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் கார்ட் பார்க்கும் போது மொபைல் நம்பர் போல் இருந்தது. சிறப்பாக பந்துவீசிய ஜடேஜா 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அஸ்வின் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். இதனையடுத்து இந்திய அணி 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது.

அதிரடி ஆட்டம்
கேஎல் ராகுல் 1 ரன்னில் ஆட்டமிழக்க, அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா 20 பந்தில் 31 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார். இதில் 2 சிக்சர்களும், 3 பவுண்டரிகளும் அடங்கும். விராட் கோலி 20 ரன்கள் சேர்க்க, சர்வதேச கிரிக்கெட்டில் 25 ஆயிரம் ரன்களை அவர் கடந்தார். ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக விளையாட முற்பட்டு 12 ரன்கள் சேர்க்க, பரத் அதிரடியாக விளையாடி 23 ரன்கள் சேர்த்தார்.

100வது வெற்றி
தனது 100வது டெஸ்டில் விளையாடிய புஜாரா, கடைசி பந்தில் பவுண்டரி அடிக்க 31 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் இந்திய அணி டெஸ்ட் போட்டியை வென்றது. இது சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா பெறும் 100வது வெற்றியாகும்.இதனிடையே இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி வரும் மார்ச் 1ஆம் தேதி இந்தூரில் நடைபெறும்.


Click it and Unblock the Notifications