மும்பை: 2025 ஆசிய கோப்பையில் இருந்து இந்திய அணி பின்வாங்கி இருப்பதாக பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன. 2025 ஆசிய கோப்பை இந்தியாவில் நடைபெற உள்ளது. பிசிசிஐதான் இந்த தொடரை நடத்த உள்ளது. அதே சமயம், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக பாகிஸ்தான் அமைச்சர் மொஹ்சின் நக்வி இருக்கிறார்.
பாகிஸ்தான் அமைச்சர் தலைவராக இருக்கும் ஒரு அமைப்பின் கீழ் நடக்கும் ஆசிய கோப்பையை இந்தியாவில் நடத்த விரும்பவில்லை என்பதோடு, அதில் இந்திய அணியும் பங்கேற்க விரும்பவில்லை என்ற முடிவை பிசிசிஐ எடுத்து இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், இது குறித்து ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு பிசிசிஐ சார்பில் கடிதம் எழுதப்பட்டு இருப்பதாகவும், அதில் தாங்கள் ஆசிய கோப்பை நடத்த விரும்பவில்லை, மேலும் அதில் பங்கேற்கவும் விரும்பவில்லை எனத் தெரிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்தியாவில் தற்போது பாகிஸ்தானுக்கு எதிரான மனநிலை நிலவி வரும் நிலையில், பாகிஸ்தான் அமைச்சருக்குக் கீழே இந்திய அணி ஒரு தொடரில் விளையாட முடியாது என பிசிசிஐ வட்டாரத்தில் கூறப்படுகிறது. மேலும், இந்த நகர்வின் மூலம் பாகிஸ்தானுக்கு பிசிசிஐ சார்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஏனெனில், ஆசியக் கோப்பைக்கான விளம்பரதாரர்கள் மற்றும் ஒளிபரப்பு உரிமைக்கு அதிக தொகை அளித்திருப்பது என அனைத்துமே இந்திய நிறுவனங்கள்தான். தற்போது இந்திய அணி அந்தத் தொடரில் விளையாடவில்லை என்றால், அவர்கள் அனைவரும் அந்த தொடரில் இருந்து விலகுவார்கள். அது ஆசிய கோப்பைக்கு மிகப்பெரிய சிக்கலாக அமையும். ஆசிய கோப்பை ரத்து செய்யப்படவும் அதிக வாய்ப்பு உள்ளது.
இதன் காரணமாக ஆசிய கோப்பையில் இருந்து இந்திய அணி விலகுவது, ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக இருக்கும் பாகிஸ்தான் அமைச்சர் மொஹ்சின் நக்விக்கு மிகப்பெரிய தலைவலியாக இருக்கும். இந்தத் தொடரில் இந்தியா, பாகிஸ்தான் மட்டும் இன்றி இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகளும் விளையாட இருக்கின்றன.
அந்த அணிகளுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, இது குறித்து விரைவில் கிரிக்கெட் உலகில் பரபரப்பு எழும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், பாகிஸ்தான் இல்லாமல் மற்ற ஆசிய அணிகளைச் சேர்த்து இந்தியா தனிப்பட்ட முறையில் ஒரு தொடரை நடத்தும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதற்கான சாத்தியங்கள் குறித்து வரும் நாட்களில் தான் தெரிய வரும்.