ஆஸி.யுடனான கடைசி போட்டி: 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா சூப்பர் வெற்றி-ரோகித் அபார சதம்
நாக்பூர்: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாக்பூரில் நடைபெற்ற கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணியின் ரோகித் ஷர்மாவின் 125 ரன்கள் குவித்து செம ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளது. 3 போட்டிகளில் இந்திய அணியும் ஒரு போட்டியில் ஆஸ்திரேலியாவும் வென்றன.
தொடரை வென்றதால் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தது இந்திய அணி. ஆனால் கடந்த போட்டியில் தோற்றதால் 2-வது இடத்துக்கு இந்தியா தள்ளப்பட்டது.

சீரான ரன் குவிப்பு
இந்நிலையில் நாக்பூரில் 5-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி சீராக ரன்களைக் குவித்தது.

ஆஸி. 242 ரன்கள் குவிப்பு
50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு ஆஸ்திரேலியா 242 ரன்கள் குவித்தது. இந்தியா வெல்ல 243 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆஸ்திரேலியா அணியின் வார்னர் அதிகபட்சமாக 53 ரன்கள் குவித்தார். இந்திய அணி அக்ஸர் படேல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

வெளுத்து விளையாடிய ரஹானே, ரோகித் ஷர்மா
இதையடுத்து இந்திய அணியின் ரஹானேவும் ரோகித் ஷர்மாவும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் நிலைத்து நின்று அபாரமாக ரன்கள் குவித்தனர். இந்திய அணி 124 ரன்கள் எடுத்த போது ரஹானே அவுட் ஆனார். அவர் 74 பந்துகளில் 61 ரன்களை எடுத்திருந்தார்.

ரோகித் அபார சதம்
களத்தில் இருந்த ரோகித் ஷர்மாவுடன் கோஹ்லி கை கோர்த்தார். ரோகித் ஷர்மா அபாரமாக விளையாடி 125 ரன்களைக் குவித்தார். 109 பந்துகளை எதிர்கொண்ட ரோகித் ஷர்மா 5 சிக்சர்கள், 11 பவுண்டரிகளை விளாசினார்.

227 ரன்கள் குவித்த இந்தியா
இந்திய அணி 223 ரன்களை எடுத்த நிலையில் ரோகித் ஷர்மா அவுட் ஆனார். களத்தில் இருந்த விராட் கோஹ்லியும் 39 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகினர். 39.4 ஓவரில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 227 ரன்களை எடுத்திருந்தது.

7 விக்கெட் வித்தியாசம்
களத்தில் ஜாதவ், மணீஷ் பாண்டே இருந்தனர். இந்திய அணி 42.5வது ஓவரில் வெற்றி இலக்கான 243 ரன்களை எட்டியது. இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 4-1 என்ற கணக்கில் ஒருநாள் போட்டி தொடரை இந்தியா வென்றது.

மீண்டும் முதலிடம்
அத்துடன் இந்திய கிரிக்கெட் அணி சர்வதேச தர வரிசைப்பட்டியலில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. அடுத்ததாக வரும் 7-ந் தேதி முதலாவது டி20 போட்டி நடைபெற உள்ளது.

14வது சதமடித்த ரோகித்
இன்றைய போட்டியில் ரோகித் ஷர்மா தமது 14-வது சதத்தை நிறைவு செய்தார். மேலும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 6,000 ரன்களைக் கடந்த 9-வது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார் ரோகித் ஷர்மா. ரஹானே 4 போட்டிகளில் தொடர்ச்சியாக அரைசதம் வெளுத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications