கொல்கத்தா: ஈடன் கார்டன் மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ள தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பேட்டிங் வரிசை கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இளம் ஆல்-ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி அணியில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், விக்கெட் கீப்பர்கள் ரிஷப் பண்ட் மற்றும் துருவ் ஜுரெல் ஆகிய இருவரும் ஆடும் லெவனில் இடம்பெறுவது உறுதியாகியுள்ளது. இந்த அதிரடி மாற்றங்கள், இந்திய அணியின் வியூகங்கள் குறித்த பல கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளது.
ஆல்-ரவுண்டர் நிதிஷ் குமார் ரெட்டி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். நிதிஷ் ரெட்டி, தற்போது தென்னாப்பிரிக்கா 'ஏ' அணிக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள இந்தியா 'ஏ' அணியுடன் இணைவார். அந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் முடிந்த பிறகு, அவர் மீண்டும் இந்திய டெஸ்ட் அணியுடன் இணைவார் என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நிதிஷ் ரெட்டியின் தற்காலிக விடுவிப்பு, முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்தியாவின் பேட்டிங் வரிசையில் கூடுதலாக ஒரு இடத்தை உருவாக்கியுள்ளது. நிதிஷ் ரெட்டி இல்லாத நிலையில், இந்திய அணி பேட்டிங்கை பலப்படுத்தும் நோக்கில், இரண்டு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களுடன் களமிறங்குகிறது. இதன்படி, முதல் 7 இடங்களுக்கான பேட்டிங் வரிசை பின்வருமாறு அமைய அதிக வாய்ப்புள்ளது:
யஷஸ்வி ஜெய்ஸ்வால் (தொடக்க வீரர்): இடது கை பேட்ஸ்மேனான ஜெய்ஸ்வால், தனது அதிரடியான தொடக்கத்தால் அணிக்கு வலு சேர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கே.எல். ராகுல் (தொடக்க வீரர்): நீண்ட இடைவெளிக்குப் பிறகு டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராகக் களமிறங்கிய கே எல் ராகுல் சிறப்பாக ரன் குவித்து வருகிறார். ராகுலின் அனுபவம் அணிக்குக் கைகொடுக்கும்.
சாய் சுதர்ஷன் (நம்பர் 3): தமிழக வீரரான சாய் சுதர்ஷனுக்கு இது ஒரு முக்கியமான தொடர். தனது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் உள்ளார். முந்தைய இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் தொடர்களில் அவர் அரைசதங்களை அடித்து நம்பிக்கை அளித்து இருக்கிறார்.
சுப்மன் கில் (கேப்டன், நம்பர் 4): கேப்டன் சுப்மன் கில், மிடில் ஆர்டரின் தூணாக இருந்து அணியை வழிநடத்துவார்.
ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர், நம்பர் 5): அணியின் முதல் தேர்வு விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட், மிடில் ஆர்டரில் தனது அதிரடியால் ஆட்டத்தின் போக்கை மாற்றும் வல்லமை கொண்டவர்.
ரவீந்திர ஜடேஜா (ஆல்-ரவுண்டர், நம்பர் 6): சுழற்பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் அணிக்குச் சமநிலையை வழங்கும் ஜடேஜாவின் பங்கு மிக முக்கியமானது.
துருவ் ஜுரெல் (பேட்ஸ்மேன், நம்பர் 7): தென்னாப்பிரிக்க 'ஏ' அணிக்கு எதிராக அடுத்தடுத்து இரண்டு சதங்கள் விளாசி மிரட்டியுள்ள துருவ் ஜுரெல், ஒரு சிறப்பு பேட்ஸ்மேனாகக் களமிறக்கப்படுகிறார். இது இந்திய பேட்டிங் வரிசையை மிக ஆழமாகவும், பலமாகவும் மாற்றியுள்ளது. தேவைக்கேற்ப இவர் ஐந்தாம் வரிசை முதல் ஏழாம் வரிசை வரை களமிறக்கப்படுவார்.