மும்பை: 2026 டி20 உலகக்கோப்பைக்காக ஒரு அதிரடி திட்டத்தை தீட்டியுள்ளது இந்திய அணி நிர்வாகம். இதற்காகத் தான் துணை கேப்டன் என்றும் பார்க்காமல் சுப்மன் கில்லை அணியிலிருந்து கழற்றிவிட்டு இருக்கிறது பிசிசிஐ. சுப்மன் கில் நீக்கப்பட்டதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், பிசிசிஐ-யின் அந்த பவர்பிளே திட்டம் தான் உண்மையான காரணம்.
2026 டி20 உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெறுகிறது. இங்குள்ள மைதானங்கள் போட்டி செல்ல செல்ல மந்தமாக மாற வாய்ப்புள்ளது. அப்படிப்பட்ட சூழலில், மிடில் ஓவர்களில் ரன் அடிப்பது கஷ்டம். எனவே, பவர்-பிளேயில் (முதல் 6 ஓவர்கள்) எதிரணி பவுலர்களைத் துவம்சம் செய்து அதிக ரன்களை குவிக்க வேண்டும்.

சுப்மன் கில் சிறந்த பேட்ஸ்மேன் தான். ஆனால் முதல் 6 ஓவர்களில் காட்டுத்தனமாக அடித்து ஆடும் வேகம் அவரிடம் குறைவு. இங்கு தான் அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் ஸ்கோர் செய்கிறார்கள்.
அபிஷேக் சர்மா முதல் பந்திலிருந்தே சிக்ஸர் அடிக்கும் திறன் கொண்டவர். சஞ்சு சாம்சன் முதல் சில பந்துகளில் பிட்ச்சை புரிந்து கொண்டால் அதன் பின் அவரது அதிரடியை யாராலும் தடுக்க முடியாது. இஷான் கிஷன் இடது கை ஆட்டக்காரர், பவர் பிளேயில் அசுர வேகத்தில் ரன் குவிக்கும் திறன் உடையவர். டி20 போட்டிகளில் பெரிய ஸ்கோர் எடுக்கக் கூடியவர்.
இந்த மூவரின் அதிரடி ஆட்டம் கில்லை விட பல மடங்கு அதிகம் என்று தேர்வாளர்கள் நம்புகின்றனர். மந்தமான பிட்சில் ஜெயிக்க வேண்டும் என்றால், துவக்கத்தில் அதிரடி தேவை. அதற்காகத் தான் கில்லை தியாகம் செய்துவிட்டு, இந்த மூவரையும் பிசிசிஐ தேர்வு செய்துள்ளது.
அதேபோல், ஃபினிஷிங் வீரராக ஹர்திக் பாண்டியாவை மட்டுமே நம்பியிருக்க முடியாது. அவருக்கு மாற்றாக ஒரு இடது கை அதிரடி வீரர் தேவை என்பதால் தான் ரிங்கு சிங் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார்.
ஆனால், பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர், பிட்ச் பற்றியெல்லாம் பேசாமல் நாசூக்காக முடித்துக்கொண்டார். "கில்லின் திறமை மீது சந்தேகம் இல்லை. ஆனால் அணியின் 'காம்பினேஷன்' தான் முக்கியம். 15 பேரை எடுக்கும்போது யாராவது ஒருவர் வெளியேற வேண்டும், துரதிர்ஷ்டவசமாக அது கில்லாக அமைந்துவிட்டார்" என்று மழுப்பலாகப் பதிலளித்தார்.