
பரபரப்பு
உண்மையிலேயே, இம்முறை நடந்து கொண்டிருக்கும் இந்தியா - இங்கிலாந்து தொடர் போல, இவ்வளவு சுவராஸ்யமாக இதற்கு முன்பு எந்த தொடரும் அமையவில்லை. அமைந்ததில்லை. அத்தனை மோதல்கள், அத்தனை ஆக்ரோஷம், அத்தனை பரபரப்பு.. ஏதோ, கே.வி.எஸ் ரவிக்குமார் - ரஜினிகாந்த் காம்போ படம் பார்ப்பது போல் சீனுக்கு சீன் மாஸ், பரபரப்பு என்று வேற லெவலில் இருக்கிறது இந்த தொடர். 2வது போட்டியில் இந்தியா வென்று கெத்து காட்ட, மூன்றாவது போட்டியில் "இது எங்க ஏரியா" என்று திருப்பிக் கொடுத்திருக்கிறது இங்கிலாந்து. இந்த சூடான நிலையில் தான், நான்காவது போட்டி நாளை தொடங்குகிறது.

நீடித்த குழப்பம்
ஆனால், இந்த போட்டிக்கான இந்திய பிளேயிங் லெவன் குறித்து தான் ஏகப்பட்ட குழப்பங்கள் நீடிக்கிறது. இவரை சேர்க்கணும், அவரை சேர்க்கணும் என்று வெளியில் இருந்து ஏகப்பட்ட குரல்கள் சப்தமாக எழ, இந்திய டிரெஸ்ஸிங் ரூமிலோ மயான அமைதி. முன்னாள் வீரர்கள், வர்ணனையாளர்கள் தொடங்கி லாக் டவுன் காரணமாக பள்ளிகள் துவக்கப்படாமல் வீட்டில் ஆன்லைன் கிளாஸ் அட்டென்ட் பண்ணும் சிண்டு சிறுசுகள் வரை தங்களுக்கு பிடித்த பிளேயிங் லெவலை வெளியிட்டு வருகிறார்கள்.

இரண்டு மாற்றங்கள்
இந்நிலையில், நாளை போட்டி தொடங்கவுள்ள நிலையில், ஏறக்குறைய உறுதியான பிளேயிங் லெவனை ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டுள்ளது. அதில், கேப்டன் விராட் கோலி இரண்டு மாற்றங்களை மேற்கொண்டிருப்பதாக தெரிய வருகிறது. இந்திய அணியின் 11 வீரர்கள் கொண்ட பட்டியலில், லோகேஷ் ராகுல், ரோஹித் ஷர்மா, விராட் கோலி (c) , புஜாரா, அஜின்க்யா ரஹானே (wc), ரிஷப் பண்ட் (wk), ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாகூர், முகமது ஷமி, முகமது சிராஜ், பும்ரா ஆகிய வீரர்கள் இடம்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நோ ஜடேஜா
இப்போது அந்த 2 மாற்றங்கள் குறித்து உங்களுக்கு புரிந்திருக்கும். ஆம்! நாம் எதிர்பார்த்தது போல், ரவிச்சந்திரன் அஷ்வினுக்கு இந்த போட்டியில் நிச்சயம் வாய்ப்பு கிடைப்பது உறுதியாகியுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அஷ்வின் சிறப்பாக பந்து வீசி இருந்தாலும், இங்கிலாந்து தொடரில் ஜடேஜாவுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. காரணம், அஷ்வினை விட ஜடேஜா சிறப்பாக பேட்டிங் செய்யக் கூடியவர் என்பதே காரணம். இதனால், மூன்று போட்டிகளிலும் அஷ்வினுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், இப்போது ஜடேஜாவுக்கு காயம் ஏற்பட, அஷ்வின் வாய்ப்பு உறுதியாகியுள்ளது. அது மட்டும் காரணமல்ல.. இந்த டெஸ்ட் போட்டியின் கடைசி 2 நாளில் ஸ்பின்னர்களுக்கு ஏதுவாக பிட்ச் ரியாக்ட் செய்யும் என்பதால், அஷ்வினுக்கு வாய்ப்பு உறுதியானது.

இஷாந்த் நீக்கம்
அதேபோல், வேகப்பந்துவீச்சில் இஷாந்த் ஷர்மாவுக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் அணியில் சேர்க்கப்படலாம் என்று தெரிகிறது. இத்தொடரில், இஷாந்த் ஷர்மாவால் பெரிதாக தாக்கம் ஏற்படுத்த முடியவில்லை. பந்து வீச்சில் ஸ்விங்கும் இல்லை, விக்கெட் வீழ்த்தவும் முடியவில்லை. எந்தவித சிரமமும் இன்றி, இஷாந்த் ஷர்மாவை இங்கிலாந்து எதிர்கொண்டது. இதனால் தான் ஃபாஸ்ட் பவுலிங் ஆல் ரவுண்டர் என்று நம்பப்படும் ஷர்துல் தாக்கூருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை போட்டி நாளான்று எந்த மாற்றமும் செய்யாமல் களமிறங்கி கேப்டன் கோலி ரசிகர்கள் முகத்தில் விபூதி அடிக்காமல் இருந்தால் சரி!


Click it and Unblock the Notifications











