
சாதித்த மந்தனா
முதல் விக்கெட்டுக்கு ஸ்மிரிதி மந்தனா - ஷஃபாலி வெர்மா ஜோடி 93 ரன்கள் குவித்தது. இதில், ஷஃபாலி 31 ரன்னில் அவுட் ஆனார். பிறகு, இந்திய அணி 44.1 ஓவரில் 132 ரன் எடுத்திருந்த போது மழை பெய்தது. தொடர்ந்து மழை விடாத காரணத்தால், ஆட்டம் அத்துடன் முடித்துக் கொள்ளப்பட்டது. அப்போது மந்தனா 80 ரன்னுடனும் பூனம் ரவுத் 16 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இதையடுத்து, இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மந்தனா டெஸ்டில் தனது முதல் சதத்தை அடித்தார். இதன் மூலம், ஆஸ்திரேலிய மண்ணில் சதம் அடித்த முதல் இந்திய வீரங்கனை என்ற சாதனையையும் அவர் படைத்தார்.170 பந்துகளில் மந்தனா தனது சாதனையை எட்டினர். இதில் 18 பவுண்டரிகளும், ஒரு சிக்ஸரும் அடங்கும். அதன்பின் மந்தனா 127 ரன்னிலும், புனம் ரவுத் 36 ரன்னிலும் அவுட் ஆனார்கள். இதில், பூனம் ரவுத் விக்கெட் தான் இப்போது பேசுபொருளாகி இருக்கிறது.

அவுட் கொடுக்காத அம்பயர்
போட்டியின் 81வது ஓவரில், ஆஸ்திரேலிய இடது கை ஸ்பின்னர் சோஃபி வீசிய பந்தை, பூனம் ரவுத் டிஃபண்ட் செய்ய முயன்றார். பந்து மிஸ்ஸாகி கீப்பரிடம் சென்றது. கீப்பர் உட்பட அனைவரும் அப்பீல் செய்ய, அம்பயர் அவுட் கொடுக்க மறுத்துவிட்டார். ஆனால், 165 பந்துகளை சந்தித்து, 36 ரன்கள் எடுத்திருந்த பூனம் ரவுத் எந்தவித சலனமும் இன்றி, அம்பயரை கூட கவனிக்காமல், களத்தில் இருந்து வெளியேறிவிட்டார். இத்தனைக்கு அம்பயர் நாட் அவுட் என்று சொல்லியும், அவர் களத்தில் இருந்து வெளியேறியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் என்னவொரு அதிர்ச்சியென்றால், இந்த டெஸ்ட் போட்டியில் டிஆர்எஸ் இல்லை. மேலும் பல முறை ரீப்ளே செய்த பிறகும் கூட ரவுத் உண்மையிலேயே அவுட் ஆனாரா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.

என்னவென்று சொல்வது?
இப்போது ஆஸ்திரேலிய ஊடகங்களும் சரி, ஆஸி., ரசிகர்களும் சரி பூனம் ரவுத் முடிவை பாராட்டி வருகின்றனர். இன்னும் சொல்லப் போனால் கொண்டாடி வருகின்றன. பூனம் ரவுத் நேர்மையை குறிப்பிட்டு ஆஸி., ஊடகங்கள் கட்டுரைகள் வெளியிட்டு வருகின்றன. அவரது நேர்மை ஒருபக்கம் இருக்கட்டும். ஆனால், முடிவை இல்லாத இந்த விவாகரத்தை என்னவென்று சொல்வது? என்னவென்று எடுத்துக் கொள்வது?

மிகப்பெரிய பாதிப்பு
டிஆர்எஸ் இந்த போட்டியில் இல்லை. ரீபிளேயில் பார்க்கும் போது, அது அவுட் தானா என்பதை யாராலும் கண்டறிய முடியவில்லை. பூனமோ அம்பயர் அவுட் இல்லை என்று சொல்லியும், அவர் பாட்டுக்கு நடையை கட்டிவிட்டார். 165 பந்துகளை சந்தித்து களத்தில் நின்ற ஒருவர், அம்பயர் முடிவை மீறி வெளியே செல்கிறார். அவரது விக்கெட் எவ்வளவு முக்கியமானது என்று தெரிந்துதான் அவர் வெளியேறினாரா என்று தெரியவில்லை. அப்படி அவர் உணர்ந்ததாகவும் தெரியவில்லை. ரிவ்யூ முறையும் இல்லை. ஒருவேளை ரிவ்யூ இருந்து, அதில் நாட் அவுட் என்று தெரிய வந்திருந்தால், அது மிகப்பெரிய பாதிப்பாக இந்திய அணிக்கு அமைந்திருக்கலாம்.


Click it and Unblock the Notifications