துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.), எலைட் பேனல் நடுவர் குழுவில் இந்தியர் ஒருவர் இடம் பிடித்துள்ளார். இந்தியாவை சேர்ந்த ஒரு நடுவர் இக்குழுவில் இடம் பெறுவது 11 ஆண்டுகளுக்கு பிறகு இதுதான் முதல்முறையாகும். முன்னதாக, தமிழகத்தை சேர்ந்த வெங்கட்ராகவன், இக்குழுவில் இடம்பெற்றார்.
தமிழகத்தை சேர்ந்தவர் சுந்தரம் ரவி (44). இதுவரை 6 டெஸ்ட், 24 ஒரு நாள் போட்டி மற்றும் 12 டி20 போட்டிகளுக்கு நடுவராக இருந்துள்ளார். அவருக்கு கவுரவமிக்க ஐ.சி.சி. எலைட் பேனல் நடுவர்கள் குழுவில் இடம் கிடைத்துள்ளது. இந்த பட்டியலில் உள்ளவர்களுக்குதான் உலகக் கோப்பை போன்ற முக்கியமானத் தொடர்களில் நடுவர்களாக பணியாற்ற வாய்ப்பளிக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் இந்தக் குழு மாற்றியமைக்கப்படும்.
இந்த நிலையில் 2015-16-ம் ஆண்டுக்கான எலைட் பேனல் நடுவர் குழு பட்டியலை ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது. இதில் ஓய்வு பெற்ற நடுவர் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் டேவிஸ் மற்றும் நியூசிலாந்தின் பில்லி பவுட்டனுக்கு பதிலாக நியூசிலாந்தை சேர்ந்த கிறிஸ் காப்பனி, கர்நாடகத்தை சேர்ந்த தமிழரான சுந்தரம் ரவி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எலைட் பேனல் நடுவர் குழுவில் இந்தியர் ஒருவர் இடம் பிடிப்பது, 11 ஆண்டுகளுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும். கடைசியாக தமிழகத்தை சேர்ந்த எஸ்.வெங்கட்ராகவன் இந்த குழுவில் இடம் பெற்றிருந்தார்.
புதிய குழுவில், இந்தியாவின் ரவி, பாகிஸ்தானின், அலீம் தார், இலங்கையின் தர்மசேனா, தென் ஆப்பிரிக்காவின் மரைஸ் எராஸ்மஸ், நியூசிலாந்தின் கிறிஸ் காப்பனி, இங்கிலாந்தின், இயான் கவுல்டு, ரிச்சர்ட் இல்லிங்வொர்த், ரிச்சர்ட் கெட்டில் போரப், நைஜல் லாங், ஆஸ்திரேலியாவின் பால் ரீபெல், ராட் டக்கர், புருஸ் ஆக்சன்போர்டு ஆகியோர்ரும் இடம் பெற்றுள்ளதாக ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.