Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“கோலி, ரோஹித்தை நீக்கினாங்க.. அதுதான் இந்தியா ஜெயிச்சதுக்கு காரணம்”.. சோயப் அக்தர் பேச்சு

லாகூர்: 2026 டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று கோப்பையைத் தக்கவைத்துள்ளது. இந்த மாபெரும் வெற்றிக்குப் பிறகு, பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் இந்திய அணியின் கட்டமைப்பையும், செயல்பாட்டையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார். அதேநேரம், இந்திய அணியின் வெற்றிக்கு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரை அணியிலிருந்து நீக்கியதுதான் முக்கியக் காரணம் என்று கூறி ஒரு புதிய விவாதத்தையும் அவர் கிளப்பியுள்ளார்.

இந்தியாவின் சிஸ்டம் வென்றுவிட்டது

பாகிஸ்தான் ஊடகம் ஒன்றில் பேசிய சோயப் அக்தர், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மற்றும் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அமைத்துள்ள சிறப்பான கட்டமைப்பைப் புகழ்ந்து தள்ளினார். இது குறித்து அவர் பேசுகையில், "இந்தியாவைப் பற்றி நான் சில விஷயங்களைச் சொல்ல விரும்புகிறேன். முதலில் அவர்களின் கொள்கை வெற்றி பெற்றுள்ளது. பிறகு அவர்களின் கட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது. மிக முக்கியமாக, அவர்களின் அணி நிர்வாகம் வெற்றி பெற்றுள்ளது.

அவர்கள் நினைத்திருந்தால் பணத்தைத் தவறான வழிகளில் செலவழித்திருக்கலாம். ஆனால் இன்று ரஞ்சி கோப்பை விளையாடும் இளம் வீரர்களுக்குக் கூட ஊதியம் வழங்கப்படுகிறது. கௌதம் கம்பீர் அனைவரிடமும் சண்டையிட்டு இரண்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்தார். பல தடைகளைத் தாண்டி, சில மூத்த வீரர்களை நீக்கிவிட்டு சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு ஆதரவு அளித்தார். கம்பீரின் இந்த கொள்கையும் நிர்வாகமும்தான் இன்று உலகக் கோப்பையை வென்று கொடுத்துள்ளது" என்று தெரிவித்தார்.

India s T20 World Cup 2026 Success to Transitioning from Senior Legends says Shoaib Akhtar

சாம்சனின் முதிர்ச்சியும், அபிஷேக்கின் அதிரடியும்

உலகக் கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோரை அக்தர் பாராட்டினார். "சஞ்சு சாம்சன் ஒரு தனி வீரராக நின்று முழு அணியையும் ஆதிக்கம் செலுத்தியதை நாம் பார்த்தோம். அபிஷேக் சர்மா மிகவும் இளம் வீரர், இன்னும் சொல்லப்போனால் ஒரு குழந்தை. ஆனால் அவரது ஆட்டம் மிகவும் முதிர்ச்சியாக இருந்தது. கிரிக்கெட்டில் அவர் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்றாலும், அவரது செயல்பாடுகள் சிறப்பாக இருந்தன" என்று அவர் குறிப்பிட்டார்.

கோலி, ரோஹித் விவகாரம்

கடந்த 2024 உலகக் கோப்பையை வென்ற பிறகு விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து தாமாகவே ஓய்வு பெற்றனர். ஆனால், அவர்களை இந்திய அணி நிர்வாகமே அடுத்த உலகக் கோப்பைக்காக அணியிலிருந்து நீக்கியது என்று சோயப் அக்தர் தனது பேச்சில் குறிப்பிட்டுப் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

"இந்திய அணி பல முக்கிய வீரர்களை நீக்கியது. கிரிக்கெட்டின் ஜாம்பவான்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு அவர்கள் விடைகொடுத்தனர். அவர்கள் உலகக் கோப்பையை வென்ற அணியில் இருந்தவர்கள், கேப்டனாக இருந்தவர்கள். ஆனால் அணி நிர்வாகம் அடுத்தக்கட்டத்தை நோக்கிச் சிந்தித்தது. அவர்களது அந்த முடிவு சரியானது என்பதை இன்று அவர்கள் நிரூபித்துவிட்டனர்.

மேலும், தங்களது முன்னாள் வீரர்களுக்கு அவர்கள் கொடுக்கும் மரியாதையும் அழகாக உள்ளது. இன்று முன்னாள் கேப்டன்களான எம்எஸ் தோனி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் மைதானத்தில் நின்று அணியின் வெற்றியைக் கொண்டாடிய விதம் அருமையாக இருந்தது. திறமையின் அடிப்படையில் வீரர்களைத் தேர்வு செய்தால், இது போன்ற வெற்றிகளை நிச்சயம் கொண்டாட முடியும். இந்தியாவுக்கு எனது வாழ்த்துகள்" என்று சோயப் அக்தர் கூறி இருக்கிறார்.

Story first published: Tuesday, March 10, 2026, 11:49 [IST]
Other articles published on Mar 10, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+