ICC World Cup 2019: ஏப்.15ல் இந்திய அணி அறிவிப்பு... ஜடேஜாவுக்கு வாய்ப்பு?
மும்பை:உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணி ஏப்ரல் 15ம் தேதியில் அறிவிக்கப்படும் என்று பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
12வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியானது இங்கிலாந்தில் மே 30ம் தேதி முதல் ஜூலை 14ம் தேதி வரை நடைபெறுகிறது. இங்கிலாந்தின் 10 நகரங்களில் உள்ள 11 ஸ்டேடியங்களில் 48 ஆட்டங்கள் நடக்கின்றன.
போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணி தங்களது 9 லீக் ஆட்டங்களையும் 9 வகையான மைதானங்களில் விளையாடுகிறது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் மே 30ம் தேதி தென் ஆப்பிரிக்காவை சந்திக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்பட 10 நாடுகள் இந்த போட்டி தொடரில் பங்கேற்கின்றன.

இந்தியா,தெ.ஆ மோதல்
இந்தியா தனது முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இந்த போட்டி ஜூன் 5ம் தேதி நடைபெறுகிறது. உலக கோப்பை போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வரும் 15ம் தேதி அறிவிக்கப்படுகிறது.

8 நாட்களுக்கு முன்பு
முன்னதாக ஏப்ரல் 23ம் தேதி இந்திய அணி அறிவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால்... 8 நாட்களுக்கு முன்னரே ஏப்ரல் 15ம் தேதி இந்திய அணி அறிவிக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

ரசிகர்கள் அதிருப்தி
ஐபிஎல் தொடரில் கோலி கேப்டனாக இருக்கும் பெங்களூரு அணி ஒன்றல்ல... இரண்டல்ல... தொடர்ச்சியாக 6 தோல்விகளை சந்தித்துள்ளது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் கோலியின் மீது அதிருப்தியில் உள்ளனர்.

குழப்பமான 4வது வரிசை
அதே போல் இந்திய அணியில் 4வது இடத்தில் விளையாடும் ராயுடு சொதப்பி வருவதால் அணியின் வரிசையும் மாறும் என தெரிகிறது. முன்னதாக ஐபிஎல் செயல்பாடு உலக கோப்பை அணி தேர்வு பாதிக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்திய அணியின் தேர்வு எப்படி இருக்குமோ என பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே கிளம்பி உள்ளது.

உத்தேச வீரர்கள்
உத்தேச இந்திய அணி வீரர்கள் விவரம்:ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி, அம்பதி ராயுடு, ரகானே, விஜய் சங்கர், எம்.எஸ் தோனி, ரிஷப் பன்ட், ஹர்திக் பாண்டியா, முகமது சமி, புவனேஷ்வர் குமார், பும்ரா, குல்தீப் யாதவ், சஹால், குருணால் பாண்டியா (அ) ரவீந்திர ஜடேஜா.


Click it and Unblock the Notifications