மும்பை: இந்தியா-தென் ஆப்பிரிக்கா நடுவேயான ஒருநாள் தொடரின் இறுதி போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நாளை நடைபெறுகிறது. இரு அணிகளும் சம பலத்துடன் மோதுவதால் அப்போட்டியில் அனல் பறக்கும் என்பதில் மாற்றமில்லை.
முதல் மற்றும் மூன்றாவது போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்ற நிலையில், 2வது மற்றும் 4வது போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. இந்நிலையில் மும்பை வான்கடே மைதானத்தில் நாளை 5வது போட்டி நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும், வெற்றி-தோல்வியை நிர்ணயிக்கும் போட்டி இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் எழுந்துள்ளது.

இந்தியாவின் பேட்டிங் வரிசை தற்போது மீண்டும் பலமானதாக மாறியுள்ளது. ரஹானே, டோணி, ரோகித் ஷர்மா ஆகியோர் நல்ல ஃபார்மில் இருந்த நிலையில், விராட் கோஹ்லி, ரெய்னா ஆகியோரும் ஃபார்முக்கு திரும்பியது அணிக்கு புத்துணர்ச்சி கொடுத்துள்ளது. அஸ்வின் இல்லாத குறையை நீக்கும் வகையில் ஹர்பஜன்சிங் பந்து வீசிவருகிறார்.
அதேநேரம், தென் ஆப்பிரிக்க அணியில் டுமினி மற்றும் மோர்க்கல் காயம் காரணமாக, 4வது ஒருநாள் போட்டியைபோலவே, 5வது போட்டியிலும் பங்கேற்பது உறுதியாகவில்லை. டுமினி, ஆடப்போவதில்லை என தெரிகிறது. மோர்க்கல் ஆடவும் வாய்ப்புள்ளது. அல்லது நேரடியாக டெஸ்ட் போட்டித்தொடரில் மோர்க்கல் களமிறங்க வாய்ப்புள்ளது.
எது எப்படியோ, நாளைய போட்டியில் அனல் பறக்கப்போவது நிச்சயம்.