ஹாங்சோ : இந்தியா - நேபாளம் அணிகள் இடையே ஆன டி20 போட்டியில் இந்திய அணி 20 ஓவர்களில் 202 ரன்கள் குவித்தது.
இந்திய அணியின் மற்ற பேட்ஸ்மேன்கள் எல்லாமே தடுமாறிய போது துவக்க வீரர் ஜெய்ஸ்வால் மற்றும் கடைசியாக வந்த ரிங்கு சிங் மட்டுமே தங்கள் அதிரடி ஆட்டத்தால் அணியை கரை சேர்த்தனர்.

ஜெய்ஸ்வால் 49 பந்துகளில் 100, ரிங்கு சிங் 15 பந்துகளில் 37 ரன்கள் குவித்தனர். சிவம் துபே 19 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தது ஆறுதல் அளித்தது.
இந்தியா - நேபாளம் அணிகள் இடையே ஆன ஆசிய விளையாட்டுப் போட்டி டி20 தொடரின் காலிறுதிப் போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக கேப்டன் ருதுராஜ் கெயிக்வாட் மற்றும் ஜெய்ஸ்வால் களமிறங்கினர்.
ஜெய்ஸ்வால் துவக்கம் முதலே அதிரடி ஆட்டம் ஆடத் துவங்கினார். ஆனால், கேப்டன் ருதுராஜ் கெயிக்வாட் மெதுவாக ஆடினார். ஜெய்ஸ்வால் ஒரு பக்கம் சிக்ஸ், ஃபோர் என அடித்து நேபாள அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார்.
ருதுராஜ் 23 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த திலக் வர்மா 2, ஜிதேஷ் சர்மா 5 ரன்களில் வெளியேறினர். ஜெய்ஸ்வால் 48 பந்துகளில் 100 ரன்களை எடுத்து தெறிக்க விட்டார். எனினும், அவர் அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார்.
சிவம் துபே 25 ரன்கள் சேர்த்தார். ரிங்கு சிங் கடைசி 2 ஓவர்களில் அதிரடி ஆட்டம் ஆடி 15 பந்துகளில் 2 ஃபோர், 4 சிக்ஸ் அடித்து அதிரடி காட்டினார்.
இந்தியா 20 ஓவர்களில் 4 விக்கெட் இழந்து 202 ரன்கள் குவித்தது. ஜெய்ஸ்வால், ரிங்கு சிங் இல்லாமல் போனால் இந்தியா இந்தப் போட்டியில் மோசமான நிலையை எட்டி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.