ஆபத்பாந்தவன் தினேஷ்..... ஃபார்மில் கோஹ்லி.... முரளி நல்ல துவக்கம்... இந்தியா சூப்பர்!
Recommended Video

செல்ம்ப்ஸ்போர்டு: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு முன்பாக கவுன்டி அணியான எசக்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் முதல் நாளில் இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்றுள்ளது. முதலில் நடந்த டி-20 தொடரை 2-1 என இந்தியா வென்றது. அடுத்து நடந்த ஒருதினப் போட்டித் தொடரை 2-1 என இங்கிலாந்து வென்றது.
இரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட முக்கியமான டெஸ்ட் போட்டித் தொடர் ஆகஸ்ட் 1ம் தேதி துவங்குகிறது.
அதற்கு முன் மூன்று நாள்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் எசக்ஸ் அணியுடன் இந்திய அணி விளையாடுகிறது. இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது. முதல் நாளான நேற்று ஆட்ட நேர இறுதியில் இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் எடுத்துள்ளது.

5 ரன்களுக்கு 2 விக்கெட்
முரளி விஜய் மற்றும் ஷிகார் தவான் துவக்க வீரர்களாக களமிறங்கினர். ஆட்டத்தின் 3வது பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் தவான் அவுட்டானார். மாட் கோல்ஸ் பந்து வீச்சில் சத்தேஸ்வர் புஜாராவும் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். இதனால் 5 ரன்களுக்கு 2 விக்கெட்களை இந்தியா இழந்தது.

4வது வீரர் பிரச்னை
மிகவும் வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்டிருந்தாலும், நான்காவது வீரராக யாரை இறக்குவது என்ற பிரச்னை இந்திய அணியை தொடர்ந்து துரத்தி வருகிறது. இந்த ஆட்டத்தில் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்டான அஜங்கா ரகானே 4வது வீரராக களமிறங்கினார். மிகவும் பொறுப்பாகவும், நிதானமாகவும் 47 பந்துகளில் 17 ரன்களை சேர்த்தார்.

கோஹ்லி ரன்குவிப்பு
அடுத்து களமிறங்கிய கேப்டன் விராட் கோஹ்லி, முரளி விஜயுடன் இணைந்து ரன்களை குவித்தார். 53 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முரளி விஜய் ஆட்டமிழந்தார். 68 ரன்கள் எடுத்த நிலையில் கோஹ்லியும், 58 ரன்களுக்கு லோகேஷ் ராகுலும் ஆட்டமிழந்தனர்.

தினேஷ் அபார ஆட்டம்
இந்த நிலையில் 7வது வீரராக தினேஷ் கார்த்திக் களமிறங்கினார். 94 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 82 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். மறுபுறம் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டயா 33 ரன்களுடன் களத்தில் உள்ளார். 2014 தொடரில் திணறிய கோஹ்லி ஃபார்மில் உள்ளது, முரளி விஜய் நல்ல துவக்கம், இதுவரை நான்கு பேர் அரைசதம், ஆபத்தில் உதவும் தினேஷ் கார்த்திக், நான்காவது வீரராக ரகானே என இந்திய அணியின் செயல்பாடு திருப்தியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.


Click it and Unblock the Notifications