தென்னாப்பிரிக்கா : இந்தியா-தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் டெஸ்ட் தொடருக்கு காந்தி-மண்டேலா பெயர் சூட்டப்பட்டு கோப்பைக்கு சுதந்திர கோப்பை என பெரிடப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வருகிற நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாட இருக்கிறது.

இந்த போட்டி தொடர் முதல் இனி வரும் காலங்களில் இரு நாடுகள் இடையே நடைபெறும் டெஸ்ட் போட்டி தொடர்கள் அனைத்தும் சுதந்திரத்துக்காக போராடிய தலைசிறந்த மனிதர்களான மகாத்மா காந்தி-நெல்சன் மண்டேலா ஆகியோரின் பெயரில் அழைக்கப்படும் என்று தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை இந்திய கிரிக்கெட்டு கட்டுப்பாட்டு வாரியமும் ஏற்றுக்கொண்டுள்ளது. இது குறித்து பி.சி.சி.ஐ. செயலாளர் அனுராக் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் தலைசிறந்த காந்தி, மண்டேலா பாதையை பின்பற்ற வேண்டும் என்றும், எனவே தான் இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் தொடருக்கு காந்தி-மண்டேலா பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதே போன்று தென்னாப்பிரிக்க கிரிக்கெட் சங்கத் தலைவர் ஹரூன் லோர்கெட் விடுத்துள்ள அறிக்கையில், இந்த செய்தி இரு நாட்டு மக்களுக்கும் இனிப்பான செய்தி என்று தெரிவித்துள்ளார். இருவரது சிந்தனைகளை கடைபிடிப்பதைத் தவிர வேறு சிறந்த கடமை இருக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.