மும்பை: ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு இடம் கொடுக்கப்படவில்லை. ஆனால் காத்திருப்பு பட்டியலில் உள்ள வீரர்களின் பட்டியலில் கூட ஸ்ரேயாஸ் ஐயரின் பெயர் இல்லாதது ரசிகர்களிடையே கடுமையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இதற்கு ஸ்ரேயாஸ் ஐயரின் அரசியல் நிலைப்பாடே காரணம் என்று விமர்சிக்கப்படுகிறது.
நடப்பாண்டுக்கான ஆசியக் கோப்பை தொடர் செப்டம்பர் 9ல் தொடங்கி செப்டம்பர் 28 வரை நடக்கவுள்ளது. அடுத்த ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடக்க உள்ள நிலையில், ஓராண்டுக்கு முன்பாகவே இந்திய அணி தயாராக தொடங்கி இருக்கிறது. அதற்கான முதல் புள்ளியாக ஆசியக் கோப்பை தொடர் அமைந்துள்ளது. இந்த நிலையில் ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் பெயர் இடம்பெறவில்லை. ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் கேப்டனாக ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர், 600 ரன்களுக்கு மேல் விளாசி அசத்தினார். குறிப்பாக குவாலிஃபையர் 2வது சுற்றில் ஸ்ரேயாஸ் ஐயர் ஆடிய ஆட்டம் பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஜாம்பவான் வீரரான பும்ராவையே அசால்ட்டாக எதிர்கொண்டு ரன்களை குவித்தார்.
ஆனாலும் ஆசிய கோப்பை தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் சேர்க்கப்படவில்லை. இதுகுறித்த கேள்வி எழுப்பப்பட்ட போது, யாரின் இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயரை களமிறக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள்.. ஸ்ரேயாஸ் ஐயர் வாய்ப்புக்காக காத்திருப்பதை தவிர வேறு வழியில்லை என்று அஜித் அகர்கர் கோபத்துடன் பதில் அளித்தார்.
இந்த நிலையில் ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணியின் மாற்று வீரர்களுக்கான பட்டியல் வெளியாகி இருக்கிறது. அதன்படி பிரசித் கிருஷ்ணா, வாஷிங்டன் சுந்தர், ரியான் பராக், துருவ் ஜுரெல், யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஆனால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயரின் பெயர் இடம்பெறவில்லை.
இதற்கு ஸ்ரேயாஸ் ஐயரின் அரசியல் நிலைப்பாடு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் உலகக்கோப்பை தொடரின் தோல்வியின் போதே பிரதமர் மோடியுடன் கை குலுக்காமல் ஸ்ரேயாஸ் ஐயர் தவிர்த்திருந்தார். அதன்பின் பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்ட துருவ் ராதேவையும் பின் தொடர்ந்திருந்தார். இதன் காரணமாக அவர் கடந்த ஆண்டு பிசிசிஐ ஒப்பந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை.
தற்போதும் அதன் காரணமாகவே ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய டி20 அணியில் சேர்க்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணிக்காக அதிக ரன்களை விளாசியது ஸ்ரேயாஸ் ஐயர் தான். ஆனால் ஸ்ரேயாஸ் மீண்டும் புறக்கணிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.