இலங்கைக்கு எதிரான இந்திய அணி.. யாருக்கு எல்லாம் வாய்ப்பு.. கேப்டன்கள் யார்? முழு விவரம்
மும்பை : 2023 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே இந்திய கிரிக்கெட் அணி சுழன்று, சுழன்று கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளது. குறிப்பாக ஜனவரி மாதத்தில் மட்டும் இந்திய அணி இலங்கைக்கு எதிராக 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரிலும், நியூசிலாந்துக்கு எதிராக 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது.
தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவதால் டி20 போட்டிக்கு ஒரு அணியும், ஒருநாள் போட்டிக்கு ஒரு அணியையும் அறிவிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் , டி20 கேப்டன் பதவியிலிருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டு, ஹர்திக் பாண்டியா அறிவிக்கப்படலாம் என்று தகவல் வெளியானது.
இதனை நம்பி ஸ்டார் ஸ்போர்டஸ் நிறுவனமும் ஹர்திக் பாண்டியாவை வைத்து விளம்பரம் வெளியிட்டது. ஆனால் இந்த வீடியோவை நீக்க கோரி பிசிசிஐ அறிவுறுத்தி இருக்கிறது. இதனால் கேப்டன் விவகாரத்தில் இன்னும் மர்மம் நீடிக்கிறது.

தொடக்க வீரர்கள்
மற்ற அணி விவகாரம் பொறுத்தவரை, டி20 போட்டிக்கு என தனி வீரர்களை தேர்வு செய்யவே பிசிசிஐ முடிவு எடுத்துள்ளது. அதன் படி வங்கதேசத்திற்கு எதிராக இரட்டை சதம் விளாசிய இஷான் கிஷன் மற்றும் விஜய் ஹசாரே தொடரில் கலக்கிய ருத்துராஜ் கெய்க்வாட்க்கும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. மேலும், தொடர்ந்து உள்ளூர் போட்டியில் கலக்கி வரும் பிரித்வி ஷாக்கும் அழைப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடுவரிசை வீரர்கள்
இதே போன்று உலகின் முதல் நிலை டி20 வீரரான சூர்யகுமார் யாதவும் டி20 அணிக்கு திரும்புகிறார். சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா ஆகியாரும் அணியில் தேர்வு செய்யப்பட உள்ளார். காயம் காரணமாக கடந்த சில நாட்களாக விளையாடாத ஆல் ரவுண்டர் ஜடேஜாவும் அணிக்கு திரும்புகிறார். வங்கதேச தொடரில் ஓய்வு வழங்கப்பட்ட ஹர்திக் பாண்டியாவும் டி20 அணியில் விளையாடுகிறார்.

வேகப்பந்துவீச்சாளர்கள்
சுழற்பந்துவீச்சாளர் சாஹல், குல்தீப் யாதவ் இந்திய அணிக்கு திரும்ப உள்ளனர். வேகப்பந்துவீச்சாளர் பட்டியலில் பும்ரா அணிக்கு திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும் பிசிசிஐ அவருடய விவகாரத்தில் அவசரம் காட்டாது என தெரிகிறது. அனுபவ வீரர்கள் புவனேஸ்வர் குமார், தீபக் சாஹர், சர்துல் தாக்கூர், உம்ரான் மாலிக் ஆகியோர் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளது.

ஒருநாள் அணி
டி20 அணியில் ஓய்வு வழங்கப்பட்ட சீனியர் வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா, சுப்மான் கில், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், ஷிகர் தவான், முகமது சிராஜ் ஆகியோர் ஒருநாள் அணியில் இடம் பெறலாம். கிட்டத்தட்ட இதே அணிகள் ஒரிரு மாற்றங்களுடன் அறிவிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. சேத்தன் சர்மா தலைமையிலான பழைய தேர்வுக்குழு நாளை இந்திய அணியை அறிவிக்க உள்ளது.

அட்டவணை
வரும் ஜனவரி 3ஆம் தேதி 1 டி20 வான்கடே, மும்பை
வரும் ஜனவரி 5ஆம் தேதி 2வது டி20 புனே
வரும் ஜனவரி 7ஆம் தேதி 3வது டி20 ராஜ்காட்
வரும் ஜனவரி 10ஆம் தேதி முதல் ஒருநாள் கவுகாத்தி
வரும் ஜனவரி 12ஆம் தேதி 2வது ஒருநாள் கொல்கத்தா
வரும் ஜனவரி 15ஆம் தேதி 3வது ஒருநாள் திருவனந்தபுரம்


Click it and Unblock the Notifications