மும்பை: 2024-ல் ரோஹித் சர்மா தலைமையில் டி20 உலகக்கோப்பையை வென்று சரித்திரம் படைத்த இந்திய அணியில் இடம்பெற்றிருந்த 15 வீரர்களில், வெறும் 8 பேர் மட்டுமே 2026 உலகக்கோப்பை அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 7 இடங்களுக்குப் புதிய மற்றும் மாற்று வீரர்கள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
2024 உலகக்கோப்பை வெற்றிக்குப் பிறகு, கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றனர். இதனால் இந்த மூன்று இடங்களும் காலியாகின. ஓய்வு பெற்றவர்களைத் தவிர்த்து, 2024 டி20 உலகக்கோப்பை அணியில் இருந்த 4 முக்கிய வீரர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் 2025-ல் டி20 போட்டிகளில் பெரிய அளவில் விளையாடாததால் நீக்கப்பட்டுள்ளார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் நீக்கப்பட்டது பலருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது. டி20 அணியில் துவக்க வீரருக்கு கடும் போட்டி இருப்பதால் ஜெய்ஸ்வாலுக்கு இடம் கிடைக்கவில்லை. பும்ரா, அர்ஷ்தீப் இருப்பதால் முகமது சிராஜுக்கும் இடமில்லை. வழக்கம் போல இம்முறையும் யுஸ்வேந்திர சாஹல் கழற்றிவிடப்பட்டுள்ளார்.
நீக்கப்பட்ட மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்குப் பதிலாக 7 வீரர்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். அபிஷேக் சர்மா நம்பர் 1 டி20 பேட்ஸ்மேனாக உருவெடுத்துள்ள நிலையில் துவக்க வீரராக ரோஹித் சர்மா இடத்துக்காக சேர்க்கப்பட்டுள்ளார். ரிங்கு சிங் மாற்று ஃபினிஷர் இடத்துக்கு வந்துள்ளார். திலக் வர்மா மிடில் ஆர்டரில் விராட் கோலி இடத்தில் பலம் சேர்க்கிறார்.
வாஷிங்டன் சுந்தர் மாற்று ஆல்-ரவுண்டராக சேர்க்கப்பட்டுள்ளார். ஹர்ஷித் ரானா மாற்று வேகப்பந்து வீச்சாளராக சேர்க்கப்பட்டுள்ளார். வருண் சக்கரவர்த்தி நம்பர் 1 டி20 பவுலராக மிரட்டும் நிலையில் 2026 டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பிடித்துள்ளார். இஷான் கிஷன் யாரும் எதிர்பாராத வகையில் மாற்று விக்கெட் கீப்பராக இடம் பெற்றுள்ளார். .
2024 அணியிலிருந்து 2026 அணிக்குத் தொடரும் அந்த 8 வீரர்கள் இவர்கள் தான்: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், அக்சர் படேல் (துணை கேப்டன்), சஞ்சு சாம்சன், சிவம் துபே
2024 அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், அக்ஷர் படேல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், சிவ துபே, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்.
2026 அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அக்சர் படேல் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, ரிங்கு சிங், ஹர்ஷித் ரானா, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வாஷிங்டன் சுந்தர்.