ஆஸ்திரேலியாவை வெச்சு செஞ்ச ஜூனியர் அணி
கிறிஸ்ட்சர்ச்: கேப்டன் பிருத்வி ஷாவின் பொறுப்பான அதிரடி ஆட்டம், ஓப்பனர் மன்ஜோத் கால்ராவின் பார்ட்னர்ஷிப், வேகப்பந்து வீச்சாளர்கள் ஷிவம் மவி, கம்லேஷ் நகர்கோடியின் அபார பந்துவீச்சு என, 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஒட்டுமொத்த இந்திய அணி, 100 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வென்றது.
நியூசிலாந்தில், 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதில் இந்தியா தனது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் மோதியது.

முதலில் ஆடிய இந்திய அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு, 328 ரன்கள் எடுத்தது. ரஞ்சிப் போட்டியில் அசத்திய கேப்டன் பிருத்வி ஷா, மன்ஜோத் கால்ரா உடன், முதல் விக்கெட்டுக்கு, 180 ரன்கள் குவித்து, ஆஸ்திரேலியாவை திணறடித்தார்.
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் முதல் விக்கெட்டுக்கு இந்திய அணி எடுத்துள்ள அதிகபட்ச ரன்கள் இதுவாகும்.
100 பந்துகளில், 8 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன், 94 ரன்கள் எடுத்தார் பிருத்வி ஷா. மறுமுனையில் மன்ஜோத் கால்ரா, 99 பந்துகளில், 12 பவுண்டரிகள், ஒரு சிக்சருடன், 86 ரன்கள் குவித்தார். துணை கேப்டன் ஷுப்மான் கில், 63 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 42.5 ஓவர்களில் 228 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. வேகப்பந்து வீச்சாளர்கள் கம்லேஷ் நகர்கோடி, ஷிவம் மவி தலா மூன்று விக்கெட்களை வீழ்த்தினர்.
ஆஸ்திரேலிய அணியின் ஜாக் எட்வர்ட்ஸ், 90 பந்துகளில், 73 ரன்கள் எடுத்ததுடன், 65 ரன்களுக்கு 4 விக்கெட்களையும் வீழ்த்தி அசத்தினார். ஆனால், மற்ற வீரர்கள் கைகொடுத்தாததால், ஆஸ்திரேலியா, 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இதன் மூலம், 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வெற்றியுடன் துவக்கியுள்ளது இந்திய அணி. பி பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில், பப்புவா நியூ குய்னா அணியை, ஜிம்பாப்வே, 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்திய அணி, அடுத்ததாக நாளை, பப்புவா நியூ குய்னா அணியுடனும், 19ம் தேதி ஜிம்பாப்வே அணியுடனும் மோதுகிறது.
Story first published: Monday, January 15, 2018, 17:01 [IST]
Other articles published on Jan 15, 2018


Click it and Unblock the Notifications