அடடா அடடா.. இந்தியாவின் காட்டில் செம மழை!
ராஞ்சி: ஒரு தினப் போட்டித் தொடர் வெற்றிக்கு பிறகு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 போட்டித் தொடரையும் இந்தியா வெற்றியுடன் துவக்கியுள்ளது.
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியுடனான ஒருதினப் போட்டித் தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. அதற்கடுத்து 3 டி-20 போட்டித் தொடர் கேப்டன் கூல் டோணியின் சொந்த ஊரான ராஞ்சியில் நேற்று துவங்கியது.
மழையால் பாதிக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 18.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்தது. 6 ஓவர்களில் 48 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 5.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 49 ரன்கள் எடுத்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.

மோசமான தோல்விகளை சந்திக்கும் ஆஸி.
ஆஸ்திரேலியா அணி இந்தியத் தொடரில் சொதப்பி வருகிறது. பேட்டிங்கில் மிகவும் மோசமாக உள்ளது. தொடர்ந்து விக்கெட்டுகளை இழப்பது அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாகும்.

தொடர் தோல்வியில் ஆஸி.
ஒருதினப் போட்டித் தொடரில் சென்னை ஆட்டத்தில் 35 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்தது. அடுத்தது கோல்கத்தாவில் 42 ரன்களுக்கு 5 விக்கெட், நாக்பூரில் 37 ரன்களுக்கு 5 விக்கெட் என, தொடர்ந்து விக்கெட்டுகள் சரிவது ஆஸ்திரேலியாவுக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஞ்சியில் ரகளை வெற்றி
ராஞ்சியில் நேற்று நடந்த ஆட்டத்தில் கூட, 59 ரன்கள் சேர்ப்பதற்குள் 7 விக்கெட்களை இழந்தது. ஆஸ்திரேலியாவின் மோசமான பேட்டிங் என்பதைவிட, இந்தியர்களின் மிகவும் சிறப்பான பந்துவீச்சை அவர்களால் சமாளிக்க முடியவில்லை என்பதே உண்மை.

பவுலிங்கில் சோடை போன ஆஸி.
பவுலிங்கிலும் ஆஸ்திரேலியா சோபிக்கவில்லை. ராஞ்சியில் 6 ஓவர்களில் 48 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில், ஒரு விக்கெட்டை இந்தியா இழந்தது. ரன் குவிப்பை கட்டுப்படுத்தும் வாய்ப்பை ஆஸ்திரேலியா பயன்படுத்தவில்லை. ஆஸ்திரேலியாவைப் போலில்லாமல் மிகவும் வலுமையான பேட்டிங் வரிசை கொண்டுள்ளதால், இந்தியாவுக்கு வெற்றி சுலபமானது.

ஆஸிக்கு எதிராக 10வது வெற்றி
இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடியுள்ள டி-20 போட்டிகளில் 10வது வெற்றியையும், தொடர்ந்து, 7வது வெற்றியையும் இந்தியா பதிவு செய்துள்ளது. அடுத்து 10ம் தேதி குவஹாத்தியிலும், 13ல் ஐதராபாத்திலும் அடுத்த டி-20 போட்டிகள் நடக்க உள்ளன. இந்தத் தொடரையும் வெல்வதற்கு இந்தியாவுக்கே அதிக வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications