இந்திய பவுலர்கள் அபாரம் - 239 ரன்களுடன் சுருண்டது இலங்கை

இலங்கை-இந்தியா இடையிலான 3வது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி கட்டாக்கில் உள்ள பாராபதி மைதானத்தில் இன்று மதியம் துவங்கியது.
'டாஸ்' வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. தரங்காவும், தில்ஷானும் முதலில் களமிறங்கினர்.
18 பந்துகளில் 10 பவுண்டரிகள் அடித்து அதிரடியான ஆரம்பத்தை கொடுத்த தில்ஷான், ஆஷிஷ் நெஹராவின் பந்தில் 6.2வது ஓவரிலேயே அவுட்டானார்.
நெஹராவின் பந்தை அடித்த தில்ஷான் அதை திணேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து விட்டு வெளியேறினார். அவரது ஸ்கோர் 41.
தில்ஷானுக்கு பிறகு கேப்டன் சங்ககாரா இறங்கினார். தரங்கா 51 பந்துகளில் அரை சதம் கடந்தார். கேப்டன் சங்கக்காரா 46 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷேவாக் வீசிய பந்தில், சங்கக்காராவை ஸ்டம்ப்ட் செய்தார் திணேஷ் கார்த்திக்.
மறு முனையில் ரன் குவித்து வந்த தரங்காவை ரவீந்திர
ஜடேஜா போல்ட் ஆக்கி வெளியேற்றி வைத்தார். மஹிலா ஜெயவர்த்தனே, இரண்டே ரன்களி்ல் ஆட்டமிழந்தார்.
51 பந்துகளில் அரை சதம் கடந்த தரங்கா 24.4வது ஓவரில் ரவீந்திர ஜடேஜாவின் பந்தில் போல்ட்டானார். தரங்கா 81 பந்துகளில் ஒரு சிக்ஸ், 6 பவுண்டரி அடித்து 73 ரன்கள் சேர்த்தார்.
பின்னர் வந்த சமரா கபுகேதெரா ரவீந்திர ஜடேஜாவின் பந்திலும், திலினா கடம்பி இஷாந்தின் பந்திலும் கிளீன் போல்ட் ஆனார்கள். கடம்பி 29 பந்துகளில் 22 ரன்களும், சமரா 28 பந்துகளில் 15 ரன்களும் எடுத்தனர்.
38.1வது ஓவரில் ஜடேஜாவின் பந்தில் எல்பிடபுள்யு ஆன குலசேகரா 10 ரன்கள் எடுத்தார். சூரஜ் ரன்திவ் டக்அவுட் ஆனார். பின்னர் வந்த அஜந்தா மெண்டிசும் 6 ரன்களுடன் ஆட்டமிழந்தார். ஜடேஜாவே இவரை போல்ட் ஆக்கினார்.
கடைசி நேரத்தில் லசித் மலிங்கா ஒரு சி்க்சரும், பவுண்டரியும் அடித்து 13 ரன்கள் வந்தபோது நெஹராவின் பந்தில் போல்ட் ஆனார். வெலிகதாரா மட்டும் 2 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
44.2வது ஓவரில் 239 ரன்களுடன் இலங்கை அணி சுருண்டது. இந்திய அணியின் பவுலர்கள் சிறப்பாக ஆடி இலங்கையை திணறடித்தனர். உதிரிகளாக வெறும் 9 ரன்களே கொடுத்தனர்.
ரவீந்திர ஜடேஜா பிரமாதமாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை அள்ளினார். 10 ஓவர்களில் 32 ரன்கள் மட்டுமே கொடுத்தார். ஆஷிஷ் நெஹரா, இஷாந்த் இருவரும் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
ஹர்பஜன், ஷேவாக் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். ஜாகிர் கான் 7 ஓவரில் 49 ரன்கள் கொடுத்து விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை.
240 ரன்கள் என்ற இலக்கை பின்னர் இந்தியா துரத்தத் தொடங்கியது.
முன்னதாக இந்திய அணியில் தோனி இல்லாததால் ஷேவாக் கேப்டன் பணியைக் கவனித்தார். யுவராஜ் சிங் காயத்திலிருந்து குணமாகி திரும்பினார். டோணிக்குப் பதில் திணேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பிங்கை மேற்கொண்டார்.
பிரவீன் குமாருக்கு பதிலாக இஷாந்த் சர்மா களம் இறங்கினார்.
அதேபோல் இலங்கை அணியில் லசித் மலிங்கா மற்றும் குலசேகரா ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பினர்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:34 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications