மும்பை : டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி இருக்கிறது. இதன் மூலம் தோனிக்கு பிறகு இந்த டி20 உலக கோப்பையை வென்ற கேப்டன் என்ற சாதனையை ரோகித் சர்மா பெற்றிருக்கிறார்.
இந்த நிலையில் ரோகித் சர்மா ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்று தன்னுடைய தலைமை பண்பை நிரூபித்திருக்கிறார். ஆனால் விராட் கோலி கேப்டனாக இதுவரை எந்த ஒரு ஐசிசி தொடரையும் ஐபிஎல் தொடரையும் வெல்லவில்லை.

ஆஸ்திரேலியா போல் பலமான அணியாக இந்தியா விளங்கினாலும், ஒரு முறை கூட ஐசிசி கோப்பையை வெல்லாமல் வெளியேறியது. இதற்கு காரணம் கேப்டன் யுக்திகளை வகுப்பதில் சில தவறுகளை செய்கிறார் என்று பல கிரிக்கெட் வல்லுனர்களும் கருத்து தெரிவித்தனர். ஆனால் பிசிசிஐ தான் விராட் கோலி தான் பிசிசிஐ என பவரான நிலையில் அவர் இருந்தார்.
அப்படிப்பட்ட விராட் கோலியை கேப்டன் பதவியில் இருந்து நீக்க எவருக்கும் தைரியம் இல்லை. ஒருவேளை அதனை செய்தால் விராட் கோலி ரசிகர்கள் அந்த நபரை திட்டியே தீர்த்து விடுவார்கள். இந்த சூழலில் இந்திய அணி உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் ரோகித் சர்மா தான் கேப்டனாக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்த அப்போதைய பிசிசிஐ தலைவர் கங்குலி, அதற்கான முடிவை தைரியமாக எடுத்தார்.
டெஸ்ட் போட்டிக்கு விராட் கோலியின் ஆக்ரோஷம் தேவை என்றாலும் ஒரு நாள் அல்லது டி20 போட்டிக்கு விராட் கோலி தன்னுடைய கேப்டன் பதவியை விட்டு விலக வேண்டும் என்று கங்குலி விடாப்பிடியாக இருந்தார். இதன் மூலம் இந்திய அணிக்கு மூன்று பிரிவுகளிலும் கேப்டனாக ரோகித் சர்மா வந்தார். ரோகித் மீது அதிக நம்பிக்கை வைத்திருந்த கங்குலி இந்தியாவுக்கு இவர் நிச்சயம் உலக கோப்பையை வென்று தருவார் என்று கூறினார்.
இந்த சூழலில் தான் விராட் கோலி ரசிகர்கள் கங்குலியை வில்லனாகவே சித்தரித்து அவரை கடுமையாக சமூக வலைத்தளத்தில் திட்டினார்கள். எனினும் இந்திய அணிக்கு எது நல்லதோ அதை கங்குலி தைரியமாக செய்தார். கங்குலியின் இந்த முடிவை பலரும் விமர்சித்த நிலையில், தற்போது இந்திய அணிக்கு டி20 உலக கோப்பையை ரோகித் சர்மா வென்று கொடுத்திருக்கிறார். இதன் மூலம் கங்குலி செய்தது சரிதான் என்று பலரும் தற்போது கருத்து தெரிவித்து வருகின்றனர்.