அயர்லாந்துடன் தோல்விக்கு ஸ்ரேயாஸ் ஐயர் மீது பழிபோட முயற்சி.. கம்பீர் மீது மனோஜ் திவாரி மறைமுக தாக்கு
பெல்ஃபாஸ்ட்: அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி 0-2 என்ற கணக்கில் அதிர்ச்சித் தோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி, தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீரை மறைமுகமாக கடுமையாக விமர்சித்துள்ளார். 2026 டி20 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு, சூர்யகுமார் யாதவிடமிருந்து கேப்டன் பொறுப்பை ஏற்றுக் கொண்ட ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான புதிய தொடக்கம், இந்த அதிர்ச்சித் தோல்வியின் மூலம் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
பெல்ஃபாஸ்டில் நடைபெற்ற அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இந்திய அணி, முக்கியமான இரண்டாவது போட்டியில் வெறும் 1 ரன் வித்தியாசத்தில் போராடித் தோற்றது. இதன் மூலம், 2023-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக இந்திய அணி ஒரு டி20 தொடரை இழந்துள்ளது. அடுத்து இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட சவாலான டி20 தொடர் காத்திருக்கும் நிலையில், புதிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளார்.

"யார் இதற்குப் பொறுப்பேற்பார்கள்?" - மனோஜ் திவாரி கேள்வி
இந்தத் தோல்வி குறித்து தனது எக்ஸ் (X) சமூக ஊடகப் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மனோஜ் திவாரி, டிரஸிங் ரூமில் இருக்கும் முக்கிய நபரைக் குறிப்பிடாமல், தோல்விக்கான முழுப் பழியையும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மீது சுமத்த முயற்சி நடப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். "இந்தியா தென்னாப்பிரிக்காவில் உலகக் கோப்பையை வெல்லலாம், அல்லது அடுத்தடுத்த தொடர்களை வெல்லலாம். ஆனால் அயர்லாந்துக்கு எதிரான இந்த டி20 தொடர் தோல்விக்கு யார் பொறுப்பேற்பார்கள்?
டிரஸிங் ரூமில் உள்ள உண்மையான பிரச்சனை குறித்துப் பேசுங்கள் என்று நான் முன்பே கூறினேன், ஆனால் யாரும் என் வார்த்தைகளை நம்பவில்லை. இப்போது, முடிவெடுக்கும் அதிகாரத்தில் உள்ளவர்களின் நண்பர்களும், பிஆர் (PR) ஏஜென்சிகளும் இந்தத் தோல்விக்கு ஸ்ரேயாஸ் ஐயர்தான் காரணம் எனப் பழிசுமத்தத் தொடங்கிவிடுவார்கள் என்று எனக்குத் தெரியும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
"ஒரு பேட்டராக இது ஸ்ரேயாஸ் ஐயரின் தவறு மட்டுமல்ல, சிறப்பாகச் செயல்படாத மற்ற பேட்டர்களின் தவறும் இதில் உள்ளது. ஆனால், ஒட்டுமொத்தப் பழியையும் ஸ்ரேயாஸ் ஐயர் மீது மட்டுமே சுமத்த இந்த குரூப் முயற்சிக்கும். தவறு வீரர்கள் மீது அல்ல, மாறாக டிரஸிங் ரூமில் அமைதியாக அமர்ந்திருக்கும், பெரும்பாலும் யாரும் கேள்வி கேட்காத அந்த முக்கிய நபரின் (யானை போன்ற பெரிய பிரச்சனை) மீதுதான் உள்ளது. இந்தப் பிரச்சனைக்கு நாம் தீர்வு காண வேண்டிய நேரம் வந்துவிட்டது" என்று கம்பீரை மறைமுகமாகச் சுட்டிக்காட்டி சாடியுள்ளார்.
தேர்வு முறையிலும் குளறுபடிகள்: திவாரி குற்றச்சாட்டு
இளம் மற்றும் சிறந்த ஃபார்மில் உள்ள வைபவ் சூர்யவன்ஷியை பிளேயிங் லெவனில் சேர்க்காமல் புறக்கணித்ததையும் மனோஜ் திவாரி கடுமையாக விமர்சித்துள்ளார். அயர்லாந்து தொடரில் வைபவ் அறிமுகமாகி சர்வதேச கிரிக்கெட்டில் தனது பயணத்தைத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் ஓரங்கட்டப்பட்டார். அதே நேரத்தில், ஆல்-ரவுண்டர்கள் மீதான அதீத மோகம் மற்றும் வாஷிங்டன் சுந்தரின் செயல்பாடு குறித்தும் திவாரி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், "வைபவ் சூர்யவன்ஷியை முதல் போட்டியில் இருந்தே ஏன் விளையாட வைக்கவில்லை? அதற்குப் பதிலாக, ஐபிஎல் தொடருக்கு முன்னதாக நடந்த உலகக் கோப்பையில் சிறப்பாகச் செயல்பட்ட வீரர்களையே மீண்டும் நம்பினீர்கள். அவர்கள் அயர்லாந்து தொடரிலும் அதே போன்ற ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று நீங்கள் நினைத்தீர்கள்.
பார்ட் டைம் பந்துவீச்சாளர்கள் மீதான உங்களின் அதீத மோகம் பெரிய அளவில் பலன் அளிக்கவில்லை. இதனால் நீங்கள் அவரை ஒரே ஒரு போட்டியில் மட்டும் விளையாட வைத்தீர்கள். உங்களது முடிவர்களில் எந்த ஒரு நிலையான தன்மையும் இல்லை. அயர்லாந்துக்கு எதிராக இந்தியா தொடரை இழந்தது மிகவும் வருத்தமளிக்கிறது" என்று திவாரி குறிப்பிட்டுள்ளார்.
முதல் போட்டியில் விளையாடிய வாஷிங்டன் சுந்தர், தான் வீசிய ஒரே ஓவரில் 19 ரன்களைக் கொடுத்து ஏமாற்றமளித்தார். மேலும் 12 பந்துகளில் வெறும் 9 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதன் காரணமாக இரண்டாவது போட்டியில் அவர் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக சூரியன்ஷ் ஷெட்ஜே அறிமுக வீரராகக் களம் இறக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அயர்லாந்து தொடரைத் தொடர்ந்து, இந்திய அணி ஜூலை 1 அன்று ரிவர்சைடு மைதானத்தில் ஹாரி புரூக் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடவுள்ளது.


Click it and Unblock the Notifications

