பார்படாஸ் : டி20 உலக கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி வெல்லும் என்று ரசிகர்களுக்கு தான் சத்தியம் ஒன்று செய்து கொடுப்பதாக நான்கு மாதத்திற்கு முன்பு பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா கூறிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
இந்திய அணி கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக விளையாடி வந்தாலும் இறுதிப் போட்டிக்கு சென்று கோப்பையை வெல்ல முடியாமல் இருந்தது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் தொடர்ந்து இரண்டு முறையம், இறுதிப்போட்டி வரை வந்த இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியவில்லை.

இதேபோன்று 2023 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோற்காமல் இறுதிப்போட்டி வரை சென்றது. எனினும் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வியை தழுவியது. இது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் இதயத்தையும் நொறுக்கியது.
இந்த நிலையில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியா வென்று பதிலடி கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர். அப்போதுதான் பிப்ரவரி மாதம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், கலந்து கொண்ட ஜெய்ஷா தைரியமாக ஒரு பேச்சை வெளியிட்டார். அதில் 50 ஓவர் உலகக் கோப்பையில் இந்தியாவின் செயல்பாடு குறித்து நான் என்ன சொல்வேன் என்று அனைவரும் காத்துக் கொண்டு இருந்தார்கள்.
நாம் 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் தொடர்ந்து பத்து போட்டிகளில் வென்றோம். ஆனால் உலக கோப்பையை நம்மால் பெற முடியவில்லை. எனினும் ரசிகர்களின் இதயத்தை இந்திய அணி வென்றது. தற்போது நான் ரசிகர்களுக்கு ஒரு சத்தியத்தை செய்ய ஆசைப்படுகின்றேன். 2024 ஆம் ஆண்டு ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி t20 உலக கோப்பையை பார்படாசில் வெல்லும்.
இது நான் கொடுக்கும் வாக்குறுதி என்று ஜெயிஷா கூறியிருந்தார். ஜெய்ஷாவின் இந்த பேச்சு அப்போது ரசிகர்கள் மத்தியில் கவனத்தைப் பெற்றது. இந்த நிலையில் ஜெய்ஷா சொன்னது போல் ரோகித் சர்மா படை அபாரமாக விளையாடி ஒரு போட்டியில் கூட தோற்காமல் மீண்டும் சேம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருக்கிறது. இந்திய அணி மீது எவ்வளவு நம்பிக்கை இருந்தால் நான்கு மாதத்திற்கு முன்பு ஜெயிஷா இவ்வளவு அழுத்தமாக இதை சொல்லி இருப்பார் என்று ரசிகர்கள் தற்போது இதனை டிரெண்ட் செய்து வருகின்றனர். இது இந்திய அணியில் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்றும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.