கான்பூர் டெஸ்ட்டில் முன்னிலை பெற்றது இந்தியா.. இருந்தாலும் ஆபத்து…
கான்பூர் ; இந்தியா, நியூசிலாந்துக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகிறது. . இதில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 345 ரன்கள் குவித்தது.
Recommended Video
அறிமுக போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் சதம் விளாசினார். இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணியும் பதிலடி தந்தது.
3வது நாள் ஆட்டத்தை நியூசிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 129 ரன்கள் என்ற ஸ்கோருடன் தொடங்கியது

நிதான ஆட்டம்
நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் யங் 89 ரன்கள் எடுத்திருந்த போது அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கேப்டன் வில்லியம்சன் நங்கூரம் பாய்ந்து நின்று 64 பந்துகளில் 18 ரன்கள் எடுத்தார். அப்போது உமேஷ் யாதவ் வீசிய பந்தை கணிக்க தவறிய வில்லியம்சன் எல்.பி.டபிள்யூ ஆனார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராஸ் டைலர் விக்கெட்டை மதிய உணவிற்கு பிறகு அக்சர் பட்டேல் வீழ்த்தினார்.

அக்சர் பட்டேல்
ஒரு முணையில் அஸ்வின் மற்றும் ஜடேஜா ரன்களை கசிய விடாமல் கட்டுப்படுத்த மறு முணையில் அக்சர் பட்டேல் பந்தின் வேகத்தை சற்று அதிகப்படுத்தினார். அதனை எதிர் கொள்ள முடியாமல் நியூசிலாந்து அணி வீரர்கள் திணறினர். நியூசிலாந்து அணியின் ஹேன்ரி நிக்கோலஸ், டாம் பிளன்டல், என அனைவரின் விக்கெட்டையும் அக்சர் பட்டேல் சிறிய இடைவெளியில் வீழ்த்தினார்.

தவறிய சதம்
விக்கெட்டுகள் சரிந்தாலும், சதத்தை நோக்கி விளையாடி வந்த டாம் லாத்தம் 95 ரன்கள் எடுத்திருந்த போது, இறங்கி வந்த ஷாட் அடிக்க முற்பட்ட போது, பந்தை தவறவிட்டார். இதனையடுத்து கீப்பர் பரத் அவரை ஸ்டம்ப் அவுட் செய்தார். இறுதியில் நியூசிலாந்தின் பின்வரிசை வீரர்கள் மட்டையை போட்டு வெறுப்பேற்ற, அஸ்வின் அவர்களுக்கு தனது பந்துவீச்சு மூலம் குட்பை கூறினார்.

முன்னிலை
இதனால் நியூசிலாந்து அணி 295 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய பந்துவிச்சு தரப்பில் அக்சர் 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். 49 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி தனது 2வது இன்னிங்சில் களமிறங்கியது. அப்போது சுப்மான் கில் ஸ்டம்புகள் சிதற ஜேமிசன் பந்தவீச்சில் ஆட்டமிழந்தார். மூன்றாம் நாள் ஆட்ட ரே முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 14 ரன்கள் எடுத்துள்ளது. அகர்வால் 4 ரன்களுடனும், புஜாரா 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இது நியூசிலாந்து ஸ்கோரை விட 63 ரன்கள் கூடுதலாகும்.


Click it and Unblock the Notifications